3936. உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
கொல்லாமை விரதம்எனக் கொண்டார் தம்மைத்
தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: என் உள்ளத்தில் இருப்பவனும், உலகியல் மாயையாகிய கதவைத் திறந்து உள்ளத்தினுள்ளே எழுந்தருளும் தன்னைக் காண்பதற்குரிய உபாயத்தை எனக்கு உரைத்தவனும், தனது பரமாம் தன்மையையுணராதவர் பாடும் பாட்டுக்களை ஏற்றுக் கொள்ளாதவனும், எளியனாகிய யான் பாடும் பாட்டுக்களைச் சிறப்பாகக் கொண்டருளுபவனும், கொல்லாமையைத் தமது சமயத்தின் சிறந்த கொள்கை யெனக் கொண்ட சமண சமயத்தவரை விலக்காதவனும், கொலை புலை முதலிய குற்றச் செயல்களை நீக்காது செய்பவர்களைத் தன் சூழலில் சேர்த்துக் கொள்ளாதவனும், யான் செய்த பிழைகளைப் பார்த்து என்னை இகழ்ந்து விலக்காதவனும், என்னுடைய துன்பங்களைப் போக்கி என்னை ஆண்டு கொண்ட சிவபெருமானாகிய தலைவனை அவன் திருவருளே கண்ணாகக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.
உள்ளத்தின்கண் எழுந்தருளுவது பற்றிச் சிவனை, “உள்ளான்” எனவுரைக்கின்றார். உள்ளத்தின்கண் எழுந்தருளுகின்றானாயினும் அவனைக் காண வொண்ணாதபடி உலகியல் மாயை கதவிட்டு மூடியது போல் இடை நின்று தடுத்தலின், அதனைப் போக்கி ஞானவொளி காட்டிக் கண்டறிந்து இன்புறுதற்கு உபாயமான திருவருள் ஞானத்தை உபதேசித்தருளியது விளங்க, “கதவு திறந்துள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை” என்றும், சிவமே பரம்பொருள் என்னும் மெய்ம்மையை யுணராதவர் பாடும் பாட்டுக்களைப் பயனில்லாதவையென ஏற்றுக் கொள்ளாமை தோன்ற, “உணரார் பாட்டைக் கொள்ளான்” என்றும், பாடுந் தோறும் பாடுந்தோறும் மேன் மேலும் பாடுமாறு இன்பம் தந்து தனக்குள் இருந்து ஊக்குதல் புலப்பட, “என் பாட்டைக் குறிக்கொண்டானை” என்றும் கூறுகின்றார். கொல்லாமையை நல்ல கொள்கையாகக் கொண்டவர் பல சமயத்தவர் உளராயினும் சமண சமயத்தவர் அதனைச் சிறப்பாக மேற் கொள்வது பற்றி அவர்களை, “கொல்லா விரதத்தவர்” என்று கூறுவதுமுண்டு. அவர்கள் சிவனைப் பரம்பொருள் எனக் கொள்ளா தொழியினும் அவர்களை விலக்குவதில்லை என்றற்கு, “கொல்லாமை விரதம் எனக் கொண்டார் தம்மைத் தள்ளானை” எனவும், கொலை புரிதல், புலால் உண்டல் முதலிய தீச்செயல்களை மேற் கொண்டு ஒழுகுபவர்களை வேறு எத்துணை நற்பண்புடையராயினும் அவர்களை ஏற்பதிலன் என்பாராய், “கொலை புலையைத் தள்ளாதாரைத் தழுவானை” எனவும், குற்றம் புரிபவர்களைக் காண்பவர் இகழ்வது இயல்பாகவும் தாம் குற்றம் செயினும் அதனைப் பொறுத்தருளித் தம்மை ஆட்கொள்வது விளங்க, “யான் புரிந்த தவறு நோக்கி எள்ளானை” எனவும், எனக்கு வாழ்வில் உண்டாகும் துன்பங்களைப் போக்கி எனது நல்லறிவு கெடாதபடி ஆண்டருளுகின்றான் என எடுத்தோதுவராய், “இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானைக் கண்டு களித்திருக்கின்றேன்” எனவும் சொல்லித் துதிக்கின்றார்.
இதனால், கொல்லாமையை விரத மெனக் கொண்டவர்கள் சமணரை உள்ளிட்ட யாவராயினும் இறைவன் ஆண்டருளும் திறம் குறித்தோதியவாறாம். (3)
|