3939. செய்யானைக் கரியானைப் பசுமை யானைத்
திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை
மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா
வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக்
கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட
கையானை என்னை என்றும் கையா தானை
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை
ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: செம்மை நிறமும் கறுமை நிறமும் பசுமை நிறமும் ஒளி செய்யும் பொன்மை நிறமும் வெண்மை நிறமும் ஆகியவனும், மெய்ம்மைத் தன்மையும் பொய்ம்மைத் தன்மையும் பொய்யும் மெய்யும் இல்லாத வெளியாகும் தன்மையும் ஒளியாம் தன்மையும் உடையவனும், புகழ்களை எடுத்தோதுபவர்க்கு வெறுக்கப் படாதவனும், எளியனாகிய என்னை எடுத்துத் தழுவிக் கொண்ட கைகளை யுடையவனும், என்றும் வெறுக்காதவனும், எவ்வாற்றாலும் தளராதவனும், எல்லா உலகத்தவரும் புகழுமாறு என்னைப் பெற்ற தந்தையுமாகிய சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.
செம்மை கறுமை முதலிய நிறப் பண்புகளை யுடைய ஐம்பூதங்களுமாகி விளங்கு கின்றானாதலால் சிவ பரம்பொருளை, “செய்யானைக் கரியானைப் பசுமையானைத் திகழ்ந்திடு பொன்மையினானை வெண்மையானை” என்று உரைக்கின்றார். செம்மை முதலிய நிறப் பண்புகளனைத்தையும் தானாகக் கொண்டு நிலம் முதலிய பூதங்கள் தோறும் கலந்து இருப்பது பற்றி, அப்பூதங்கள் இச் செம்மை முதலிய நிறங்கட்கு உரிய வாயின என உரைத்தலுமுண்டு. மெய்ம்மையாளர்க்கு மெய்ம்மையும், பொய்யர்க்குப் பொய்ம்மையும் மேற் கொள்ளுதலால் சிவனை, “மெய்யானைப் பொய்யானை” என விளம்புகின்றார். மெய்யுணர்வுடையவர்க்கும் பொய்ந்நெறியாளர்க்கும் ஒருவனே மெய்யும் பொய்யும் என இயம்ப வொண்ணாதபடி விளங்குவதால், “மெய் பொய் இல்லா வெளியானை” எனவும், சிவஞானிகட்கு அருளொளியாய்த் திகழ்வது பற்றி, “ஒளியானை” எனவும் உரைக்கின்றார். அவன் புகழை எத்தனை முறை எத்தனைக் காலம் இடையறவின்றி ஓதினாலும் வெறுப்புக் கொள்வது இல்லாதவன் என்பாராய், “விளம்புவார்க்குக் கையானை” என்று சொல்லுகின்றார். கைத்தல் - வெறுத்தல். எத்துணை எளியனாயினும் எளிமை நோக்காது இரு கையாலும் என்னை எடுத்துத் தனது அருளில் அணைத்துக் கொள்கின்றான் என்பாராய், “என்னை எடுத்தணைத்துக் கொண்ட கையானை” என்றும், எனது எளிமைத் தன்மையின் மிகுதி கண்டு என்னை வெறுத்து எடுத்துக் கொள்ள மறுக்காதவன் என்றற்கு, “என்னை என்றும் கையாதானை” என்றும் மொழிகின்றார். ஈண்டுக் கையாதான் என்றவிடத்துக் கைத்தல், எடுத்தல் என்னும் பொருளது. எய்த்தல் - தளர்தல்; இளைத்தல் என்றுமாம். என் போன்ற மலத்தில் ஆழ்ந்து கிடக்கும் இழிந்தவர்களையும் பிறப்பித்து உய்விக்கும் முகத்தால் எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்களும் பிறரும் அவனைப் புகழ்கின்றமை தோன்ற, “எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானைக் கண்டு களித்திருக்கின்றேன்” எனக் கூறுகின்றார்.
இதனால், பன்னிறப் பொருளாய்ப் பூதங்கள் தோறும் கலந்து அவையும் செம்மை முதலிய நிறப் பண்புக்கு உரியவாதலை உரைத்தவாறாம். (6)
|