3941. ஆன்றானை அறிவானை அழிவி லானை
அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
மூன்றானை இரண்டானை ஒன்றா னானை
முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: எவ்வுயிர்க்கும் அறிவாய் அமைந்தவனும், அறிவே தானாகியவனும், அழிவில்லாதவனும், அருட் பெருஞ் சோதியானவனும், விரிந்த ஒளியை யுடைய சூரியன், சந்திரன், நெருப்பு என்ற மூன்றுமாகியவனும், தண்ணொளி வெவ்வொளி என இரண்டாகியவனும், ஒளிப் பொருளென ஒன்றாகியவனும், முன்னாகியவனும், பின்னாகியவனும், மூடத் தன்மை பொருந்திய நெஞ்சுடையவர்க்குத் தோன்றாதவனும், தூய ஞானிகளின் உள்ளத்தில் தோன்றுபவனும், சுத்த சிவ சன்மார்க்கம் என்னும் நன்னெறி எங்கும் விளக்கமுற என்னைப் பயந்தவனும், எல்லாமாய் அல்லதுமாய் இருப்பவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.
ஆன்றல் - அமைதல். எல்லா நற்குணங்களும் குறைவறக் கொண்ட சான்றோரை ஆன்றோர் என்பது போல நலம் எல்லாம் தனக்கு உருவாகக் கொண்டமைந்தமை பற்றிச் சிவபெருமானை, “ஆன்றானை” எனச் சிறப்பிக்கின்றார். “அகர வுயிர் போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து” என்று சான்றோர் கூறுதலால், “அறிவானை” என்றும், எக்காலத்தும் எவராலும் எவ்வாற்றாலும், அழிவில்லாதவனாதலால் இறைவனை, “அழிவிலானை” என்றும், அவன் அருள் ஞானமாகிய பெருமை சான்ற ஒளியே தனக்கு உருவாகக் கொண்டமை விளங்க, “அருட் பெருஞ் சோதியினானை” என்றும் இயம்புகின்றார். அலர்தல் - விரிதல். உலகில் ஒளி செய்யும் பொருட்கள் சூரியனும், சந்திரனும், நெருப்புமாகிய மூன்றும் அவனேயாதலால், “அலர்ந்த சோதி மூன்றானை” எனவும், அவ்வொளி தானும் தட்பமும் வெப்பமும் என்ற கூறுபாட்டால் இரண்டாதல் விளங்க, “இரண்டானை” எனவும், பரஞ்சோதி எனப்படும் வகையில் ஒன்றாதல் புலப்பட, “ஒன்றானானை” எனவும் உரைக்கின்றார். முன் பின் என இடமும் காலமும் இரு வகைப்படுதலின், “முன்னானைப் பின்னானை” என மொழிகின்றார். மூடர்கள் நெஞ்சு அறியாமை இருள் செறிந்து ஒன்றும் காணமாட்டாத நிலையில் இருத்தலால் அவர் நெஞ்சின்கண் இறைவன் தோன்றாமை விளங்க, “மூட நெஞ்சில் தோன்றானை” எனவும், உண்மையறிவு ஒழுக்கங்களால் தூயராகிய நல்லவர் உள்ளத்தின்கண் அருளொளியாய்த் தோன்றுதல் பற்றி, “தூயருளே தோன்றினானை” எனவும் சொல்லுகின்றார். சன்மார்க்கம் என்பது சத்தான மார்க்கம் எனப் பொருள்படும். இச் சன்மார்க்கம் பல திறப்படுதலின், திருவருளே பொருளாகக் கொள்ளும் சன்மார்க்கம் “சுத்த சன்மார்க்கம்” எனப்படும். திருவருளும் சிவத்தின் திருவடிவமாதலின் தாம் மேற்கொண்டுரைக்கும் சன்மார்க்கத்தை, “சுத்த சிவ சன்மார்க்கம்” என்று விளக்குகின்றார்.
அஃது எங்கும் எவர்பாலும் பரந்து விளங்குதல் வேண்டிப் பணி புரிகின்றாராதலின், அதற்கென்றே தம்மை இறைவன் உரிமைப் படுத்தி விட்டான் என்று உரைப்பாராய், “சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை ஈன்றானை” என்றும், பொருட்கள் யாவையும் சத்தாயும் அசத்தாயும் இருப்பது பற்றி அவற்றுள் கலந்திருக்கும் இறைவனை, “எல்லாமாய் அல்லாதானை" என்றும் இசைக்கின்றார்.
இதனால், சுத்த சிவ சன்மார்க்கம் உலகில் துலங்குமாறு தன்னைப் பிறப்பித்தான் என வடலூர் வள்ளல் எடுத்தோதியவாறாம். (8)
|