3942.

     தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
          சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
     வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
          வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
     வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
          மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
     ஈய்ந்தானை ஆய்ந்தவர்தம் இதயத் தானை
          எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

உரை:

     என்னுடைய உள்ளத்தின்கண் கலந்திருப்பவனும் என்னிடத்திலுள்ள அன்பைக் கண்டு தானும் அன்புற்று என்னைச் சூழ்ந்திருப்பவனும், யான் பாடிய பூப் போன்ற சொல் மாலைகளை அணிந்து கொண்டவனும், என்னுடைய வினைகளைப் போக்கியவனும், வேதாந்தமாகிய நெறியின் உச்சிக்கு மேல் விளங்கினவனும், என் உணர்வுக்கு வாய்ப்பாக அமைந்தவனும், தளருமிடத்து உதவும் செல்வமானவனும், அழகிய அம்பலத்தில் நடிப்பவனும், மேலாகிய நலமனைத்தும் தருபவனும், நுண்ணுணர்வால் ஆராய்ந்தறிந்த சான்றோர்கள் இதயத்தில் இருப்பவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு களித்திருக்கின்றேன். எ.று.

     உள்ளத்தின்கண் உள்ளுணர்வாய் ஒளிர்வது பற்றி, “என்னுளத்தே தோய்ந்தானை” எனவும், தன்னுடைய நினைவிலும் சொல்லிலும் செயலிலும் சூழ்ந்து நின்று காண்பது பற்றி, “என்பால் அன்பால் சூழ்ந்தானை” எனவும், தாம் பாடுகின்ற சொல் மாலைகளை மேலும் மேலும் பாடுமாறு உள்ளிருந்து செலுத்துவது பற்றி, “யான் தொடுத்த சொற் பூமாலை வேய்ந்தானை” எனவும், நன்ஞானம் எய்துதற் பொருட்டுத் தடை செய்யும் வினை யிருளைப் போக்கினமை தோன்ற, “என்னுடைய வினை தீர்த்தானை” எனவும், இயம்புகின்றார். பாடுவார் பாடுந் தோறும் மேன் மேலும் பாடுதற்கு இன்ப ஊற்றாய் நின்று ஊக்குவது புலப்பட, “யான் தொடுத்த சொற் பூமாலை வேய்ந்தானை” என்றும், “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” என்று மெய்கண்டார் முதலிய சான்றோர் கூறுதலின், “என்னுடைய வினை தீர்த்தானை” என்றும் இயம்புகின்றார். வேதாந்தம் சித்தாந்தம் என்னும் நெறி இரண்டனுள் வேதாந்தத்தின் உச்சியில் விளங்கும் சித்தாந்தத்தின் முடி மேல் சிவ பரம்பொருளாய்த் திகழ்வது விளங்க, “வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை” எனக் கூறுகின்றார். வேதாந்த முடி என்பது வேதாந்தத்தின் உச்சியில் விளங்கும் சித்தாந்தம் என அறிக. “ஓரும் வேதாந்த மென்ற உச்சியில் பழுத்த சாரம் கொண்ட சைவ சித்தாந்தம்” என்று குமரகுருபரர் கூறுவது காண்க. “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்” (சிவப்) என்று உமாபதி சிவனார் உரைப்பதும் ஈண்டு நினைவு கூரத் தக்கது. இரு நெறிகட்கும் ஞானப் பொருளாய் உணரப்படுவது பற்றி, “வாய்ந்தானை” எனக் குறிக்கின்றார். தளர்ச்சி யுறும் காலத்துப் பயன் கொள்ளுதற் பொருட்டுச் சேமித்து வைக்கும் பொருள் “எய்ப்பினில் வைப்பு” எனப்படும். அதுபோல் சோர்வுற்றவிடத்து அருள் வழங்குவது பற்றிச் சிவனை, “எய்ப்பிடத்தே வைப்பானானை” என்று போற்றுகின்றார். வரங்கள் - எல்லாவற்றினும் மேலாக வேண்டப்படும் பொருள்கள். வேண்டுவனவற்றை யெல்லாம் வேண்டிய போது விரைந்து நல்குவது பற்றி அம்பலத்திலாடும் சிவனை, “வரங்கள் எல்லாம் ஈன்றானை” என்றும், நூலுணர்வும் உண்மையுணர்வும் ஒருங்கு கொண்டு மெய்ப்பொருளை உணர்பவர்களை, ஆய்ந்தவர்” என்றும், அவர் இதயத்தை இறைவன் தனக்குக் கோயிலாகக் கொள்வது தோன்ற, “ஆய்ந்தவர் தம் இதயத்தானை” என்றும் எடுத்தோதுகின்றார்.

     இதனால், வேதாந்த முடி முடி மேல் விளங்கி எய்ப்பினில் வைப்பாய் வரம் எல்லாம் தந்து ஆய்ந்தவர் இதயத்தின்கண் இறைவன் எழுந்தருளும் திறம் இயம்பியவாறாம்.

     (9)