3943.

     நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை
          நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி
     நின்றானைப் பொன்றாத நிலையி னானை
          நிலை அறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம்
     ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை
          ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல்
     என்றானை என்றும்உள இயற்கை யானை
          எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

உரை:

     நலமனைத்தும் தன்னுருவாக அமைந்தவனும், அம்பலத்தின்கண் நடிக்கின்றவனும், நாடாமையும் நாடுதலுமாகிய இவ்வறிவுச் செயல் இரண்டினுக்கும் நடுவே விளங்கி நிற்பவனும், அழியாத நிலையை யுடையவனும், நன்னிலையை அறிந்து அவ்வறிவின் வழி நில்லாதவருடைய நெஞ்சின்கண் சிறிதும் பொருந்தாதவனும், எவ்வுயிர்க்கும் பொதுவாய் ஒன்றாய் இருப்பவனும், தனியனாய்ச் சிறுமை மிக்கவனாய் உள்ள என்னைப் பார்த்து “நீ மனத்தின்கண் அஞ்சுதல் ஒழிக” என்று தேற்றி யருளினவனும், எக்காலத்தும் சிறு மாற்றமுமின்றி இயல்பாக உள்ளவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.

     “நன்றுடையான் தீயதில்லான்” என ஞானசம்பந்தர் முதலியோர் கூறுவது பற்றி, “நன்றானை” என நவில்கின்றார். நாடுதல் - ஆராய்தல். பொருள் உண்மை காணும் முயற்சியில் நாடுதலும் நாடாமையும் நிகழ்வதுண்டு. சிவ பரம்பொருள் நலம் வேண்டி நாடப்படுதலும் பெருமை நோக்கி நாடப் படாமையும் உடையதாகலின் இரண்டற்கும் நடுவாய் நின்று நாடுவார்க்கு நாட்டமும், நாடாதவர்க்கு வேறாயும் உயர்ந்தோங்குவது பற்றி, “நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி நின்றானை” என மொழிகின்றார். உலகப் பொருட்களனைத்தும் கெட்ட விடத்தும் தான் என்றும் கெடாத நிலையினை உடையதாகலின் சிவனை, “பொன்றாத நிலையினானை” என்றும், சிவம் நின்ற செம்மை நிலை கண்டு அதற்குரிய செந்நெறியில் நில்லா தொழிகின்ற மக்களுடைய நெஞ்சின் கண் சிறிதும் பொருந்தாத தன்மையை வியந்து, “நிலை யறிந்து நில்லாதார் நெஞ்சில் இலேசம் ஒன்றானை” என்றும் உரைக்கின்றார். இலேசம் - சிறிதும். பலவாகிய எல்லா உயிர்களிடத்தும் உயிராய் நிற்கின்றானாயினும் அவன் ஒருவனே என வற்புறுத்தற்கு, “எவ்வுயிர்க்கும் ஒன்றானானை” என்று கூறுகின்றார். உலகியற் பற்றின்றித் தனித்துச் சிறுமையுற்றுச் செய்வ தறியாது அஞ்சி அலமரும் தமது உள்ளத்திற்கு அஞ்ச வேண்டா எனத் தெளிவு நல்கினமை புலப்பட, “ஒரு சிறியேன் தனை நோக்கி உளம் நீ அஞ்சேல் என்றானை” எனவும், காலந் தோறும் வேறுபடும் இயல்புடைய பொருள்கள் பலவற்றினும் வேறாய் எத்தனைக் காலம் கழியினும் தன்மை மாறாது உள்ளது உள்ளவாறு இருக்கும் இயல்பு விளங்க, “என்றும் உள இயற்கையானை” எனவும் இசைக்கின்றார்.

     இதனால், நாடுதல் நாடாமை என்ற இரண்டிற்கும் நடுவே ஓங்கி என்றும் உள்ள இறைவனது இயற்கை நலம் எடுத்தோதி இன்புறுத்தியவாறாம்.

     (10)