45. கண் கொளாக் காட்சி
அஃதாவது, காணும் கண்களின் எல்லைக்கு அடங்காது மிக்கு விளங்கும் காட்சி நலம் கூறுவதாகும். இப்பகுதிக்கண் வரும் பாட்டுக்கள் பத்தும் முன்னையதாகிய காட்சிக் களிப்பின்கண் வரும் பாட்டுக்களின் தொடர்ச்சியாக இருத்தலின் இதனை வேறாகப் பிரித்திருப்பது சிறப்பாக இல்லை.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3944. அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றம்எலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: அடியவனாகிய என்னை விரும்பினவனும், இவ்வுலக வாழ்வின் அச்சம் ஒழிக என்று உரைத்து என்னை ஆட்கொண்டவனும், சிறுமை விளைவிக்கும் நெறிகளை மேற்கொண்டு செல்லாதவாறு என்னைத் தடுத்து ஆதரித்தவனும், பெருமை தரும் ஞான நெறியில் செல்லுதற்கு இடை நின்ற தடைகள் பலவற்றையும் நீக்கினவனும், தனது திருவருளையும் அரிய பொருட்களையும் தானாகவே எனக் களித்தவனும், என்பால் காணப்படும் குற்றங்கள் எல்லாவற்றையும் உயிர்க் குணம் என்று பொறுத்துக் கொள்ளும் நற்குணங்களை யுடையவனும், சமயக் கொள்கைகள் என்னும் ஆழ்ந்த குழியில் விழாவண்ணம் என்னை எடுத்து அருள் புரிந்தவனும், எல்லாவற்றையும் செய்ய வல்ல அறிவாற்றலை எனக்குத் தந்தவனுமாகிய சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.
அடியேன் திருவடியைப் பற்றாகக் கொண்டு வாழ்பவன்; இத்தகைய என்னை என்றும் பிரியாமல் எங்கே செல்லினும் அங்கே வந்து எனது மனத்தில் தங்கி நல்லுணர்வு தந்து வாழ்விப்பது பற்றி, “அடியேனை அடுத்தானை” என்று கூறுகின்றார். ”எங்கே போவேனாயிடினும் அங்கே வந்தென் மனத் தீராய்ச் சங்கை யொன்று மின்றியே தலைநாள் கடை நாள் எக்கவே” என்று இறைவன் தம்மை அடுத்தொழுகிய திறத்தை நம்பியாரூரர் (ஐயா) உரைப்பது காண்க. உலகியலில் வாழ்வாங்கு வாழ்ந்தாலன்றி உய்தி இல்லையாதலால் வாழும் உயிர்கட்கு எய்தும் இடையூறுகட்கு அஞ்ச வேண்டா மென ஊக்குவது இறைவன் திருவருளாதலின் அது பற்றி, “அஞ்சேல் என்றிங்கு ஆண்டானை” என இயம்புகின்றார். உலகியல் மயக்கத்தால் சிறுமை தரும் நெறிகளில் செல்லுதற்கு வாய்ப்பு உண்டாதலின் அச்சமயத்து நல்லறிவு தந்து அவற்றை மேற் கொள்ளாவாறு தடுத்தருளும் நலம் பற்றியும், பெருமை தரும் ஞான நெறியில் செல்லுதற்கு ஊறு செய்யும் அறிவு செயல்களை நீக்கி யருளுகின்றானாதலின், “பெருநெறிக்குத் தடை தீர்த்தானை” என்று உரைக்கின்றார். திருவருள் ஞானத்தையும் அதன் பயனைப் பெறுதற்குரிய உடல் பொருள்களையும் இறைவனே உவந்து கொடுத்தருளுவது பற்றி, “தன் அருளும் தன் பொருளும் தானே என்பால் கொடுத்தானை” என்று கூறுகின்றார். அருளறிவும் பொருள் வகையும் பெருநெறிக்கண் செல்வார்க்குத் துணையாதல் பற்றி இடமும் காலமும் நோக்கி இறைவன் தானே உவந்து வந்து அருளுகின்றான் என்பது கருத்து. செய்யபடுகின்ற குற்றங்களுக்கு ஏதுவாவது உயிர்க்கு இயல்பாக வுள்ள குணமெனக் கொண்ட வழி அப்பெருமானுடைய திருவுள்ளம் குணங் கொண்டு கோதாட்டும் என்பது பற்றி, “குற்றமெலாம் குணமாக் கொள்ளும் குணத்தானை” என்று எடுத்தோதுகின்றார். பலவேறு சமயங்களும் அவற்றின் கொள்கைகளும் தம்வழி நின்றாரைப் பிணித்துப் பிற சமய நெறிகளை இகழ்ந்து வெறுத்துத் தீது புரியச் செய்தலால், அதற்கு இரையாகாமல் தம்மை நெறி நிறுத்தி அவற்றைச் சம்மதமாக் கொள்ளுமாறு இயக்குவது பற்றி, “சமய மதக் குழி நின்று என்னை எடுத்தானை” என இயம்புகின்றார். எல்லாச் சமயங்களையும் ஒப்ப நோக்கும் திறமின்றித் தம்மையே உறுதியாகக் கொண்டு மேலேற விடாமல் தடுப்பது பற்றிக் குறுகிய சமய மதக் கொள்கைகளை, “குழி” என்று இழித்துரைக்கின்றார். எல்லாச் செயல்களையும் இனிது ஆற்ற வல்ல தன்மைக்கு இன்றியமையாது வேண்டப்படுவது திருவருள் ஞானமாதலின், “எல்லாம் செய்வல்ல சித்தே ஈந்தானைக் கண்டு களித்திருக்கின்றேன்” என மொழிகின்றார்.
இதனால், திருவடியே பற்றாகக் கொண்ட தமக்கு அச்சம் தீர்த்துப் பெருநெறி மேற்கொள்ளத் துணை புரிந்து சமய மதக் குழியிலிருந்து மேலேற்றி ஆதரித்த அருட் செயலை விதந்தோதியவாறாம். (1)
|