3946. நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே
நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி
தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்
துன்பம்எலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்
உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
எட்டானை என்னளவில் எட்டி னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: என்பால் நட்புற்றவனும், தன்பால் நட்புக் கொண்ட என்னை விரும்பி ஏற்றுக் கொண்டு நீ நமக்கு மகனாவாய் இனி அஞ்சுதல் ஒழிக என வுரைத்து என் தலையைத் தீண்டினவனும், எட்டும் இரண்டுமாகிய எழுத்துக்களால் விளங்கும் ஓங்கார மென்னும் சொல்லைத் தனக்கு உருவாகக் கொண்டு விளங்குபவனும், துன்பங்கள் எல்லாவற்றையும் போக்கினவனும், சோர்வுற்றுச் சோம்பாதபடி ஊக்குபவனும், உண்மையுணர்வே தனது திருவுருவாகக் கொண்டு என்னுள் அமர்ந்தவனும், உண்மையை உள்ளவாறு உணர்ந்த பெரியோர்களும் உணர்ந்து கொள்ள மாட்டாதவனும், என் சிற்றறிவின் எல்லையில் அறிய நின்றவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.
என்பால் நட்புற்று நல்லன காட்டி வாழ்விக்கின்றமை புலப்பட, “நட்டானை” என்றும், இறைவன்பால் நட்புக் கொண்டு ஒழுகும் தமது நட்பை விரும்பி ஏற்றுக் கொண்டு அச்சம் ஒழிக என அறிவித்து ஊக்கித் தன் திருவடியால் என் தலையைத் தீண்டி அருள் பண்ணினான் என்பாராய், “நட்டானை நயந்து கொண்டே நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி தொட்டானை” என்றும் நவில்கின்றார். நட்டல் - நட்புக் கொள்ளுதல். தமது நட்பை ஏற்றுக் கொண்டு தமக்கு மகன் எனும் முறைமை தந்து அச்சம் நீக்கித் தலையைத் தீண்டி ஞானத் தொடர்பு உண்டு பண்ணினான் என்பது கருத்து. அ உ என்னும் இரண்டு எழுத்தும் பிரணவமாகிய ஓங்காரத்தின் கூறாதலின் அதனை, “எட்டிரண்டும் சொல்லினானை” என்று கூறுகின்றார். ஓங்காரத்தின் பொருளும் உருவும் அப்பெருமான் என்று பெரியோர் கூறுவர். திருநாவுக்கரசர், “ஓங்காரத் தொருவன் காண்” என்றும் “ஓங்கார மெய்ப்பொருள்” என்றும் (ஆலம் பொழில்) உரைப்பது காண்க. “இன்பம் காண் துன்பங்கள் இல்லாதான் காண்” என்று பெரியோர் கூறுதலின், பிறர் துனபங் கண்டு பொறான் என்பது பற்றி, “துன்பமெலாம் தொலைத்தானை” என்று சொல்லுகின்றார். சோர்வும் சோம்பலும் துன்பத்திற் கேதுவாதலின் அவற்றை நீக்கி ஊக்கமே உருவாகச் செய்பவன் என்பது தோன்ற, “சோர்ந்து தூங்க வொட்டானை” என இயம்புகின்றார். ஞானமே அவனது திருவுருவாதலின் அன்பர் உள்ளத்தில் எழுந்தருளுகின்ற போது மெய்யறிவின் உருவாய் விளங்குகின்றான் என்றற்கு, “மெய்யறிவே உருவாய் என்னுள் உற்றானை” என்று உரைக்கின்றார். இது போலவே திருநாவுக்கரசர் சிவனை, “மெய் கிளரும் ஞான விளக்குக் கண்டாய்” (மறைக்கா) என்று உரைப்பது காண்க. மெய்ஞ்ஞானிகளாலும் உணர்தற் கரியவன் என்று பெரியோர் கூறுவது பற்றி, “உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள வொட்டானை” என இயம்புகின்றார். “உணர்ந்தார்க்கு உணர்வரியோன்” (கோவை) என்று திருவாதவூரரும், “காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியன் கண்டாய்” (மறைக்கா) எனத் திருநாவுக்கரசரும் கூறுவன காண்க. உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவனாயினும் எளியார்க்கு ஆற்ற எளியன் என்பது பற்றி, “என்னளவில் எட்டினானை” என்று இசைக்கின்றார்.
இதனால், இறைவன் அறிவுருவாய், அன்பர் உள்ளத்தில் எழுந்தருளித் துணை புரியும் திறம் உரைத்தவாறாம். (3)
|