3947. சோற்றானைச் சோற்றில்உறும் சுகத்தி னானைத்
துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்
காற்றானை வெளியானைக் கனலா னானைக்
கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்
தோற்றானை நான்காணத் தோற்றி னானைச்
சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்
ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: உண்ணும் சோறாக இருப்பவனும், அதனை உண்ட வழிப் பிறக்கும் சுகத்தின் வடிவமாயினவனும், அசைவில்லாத பூதமாகிய நிலமாகவும் நீராகவும் காற்றாகவும் நெருப்பாகவும் வானவெளியாக இருப்பவனும், கருணையால் நெடிய கடல் போன்றவனும், நெஞ்சில் களங்க முடையவர்களால் காணுதற் கில்லாதவனும், அடியவனாகிய யான் கண்டு களிக்குமாறு தோன்றுபவனும், சொல்லும் வகை யறியாதவனாகிய யான், சொல்லிய புல்லிய சொற்களை எல்லாம் ஏற்றருள்பவனும், என்னுள்ளத்தில் எய்துபவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.
ஊனுடம்பைத் தாங்கி ஞான நெறியில் வாழ்தற்கு இன்றியமையாத உணவாதலின் அதன் வடிவமாக இருந்து உடல் உழைத்தற்கு ஏற்ற ஆற்றலை நல்குவது பற்றி, “சோற்றானை” என்று சொல்லுகின்றார். இனிச் சோற்றான் என்பதற்குச் சோற்றுத் துறையில் எழுந்தருளுபவன் என்று கொண்டு அங்குள்ள இறைவனை, “தொண்டு செய்து என்றும் சோற்றுத் துறையற்கே உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே” என்று திருநாவுக்கரசர் வற்புறுத்துவதும், “சுற்றம் திரு வென்று இன்ன துறந்தார் சேரும் சோற்றுத் துறையே” என்று நம்பியாரூரர் உரைப்பதும் ஈண்டு நோக்கத் தக்கதாம். சோறு என்பது முத்தியைக் குறிப்பதாகக் கொண்டு முத்தி உலகத்தை யுடையவன் என்று கொள்வது முண்டு. நாள்தோறும் காலந்தோறும் சோறுண்டு சுகம் பெறுவது மக்கள் இயல்பாதலின் அச்சுக வடிவம் சிவனே என்றற்கு, “சோற்றில் உறும் சுகத்தினானை” என்று மொழிகின்றார். சோற்றுத் துறையை அடைந்து வழிபடுவார் பெறும் சுக வடிவமும், முத்தி பெற்று இன்புறுவார் பெறும் இன்ப வடிவும் சிவனேயாதல் பற்றி இவ்வாறு கூறுகின்றார் எனினும் பொருந்தும். நிலம் முதல் ஆகாயம் ஈறாக வுள்ள பூதமைந்தும் அவன் வடிவேயாதல் விளங்க, “துளக்கமிலாப் பாரானை நீரானானைக் காற்றானை வெளியானைக் கனலானானை” என வுரைக்கின்றார். எத்துணை ஆழம் அகழ்ந்த விடத்தும் அசைதல் இல்லாத பொறை யுடைமை பற்றி நிலத்தை, “துளக்கமிலாப் பார்” என்று சொல்லுகின்றார். வழங்கக் குறை படாத பெருங் கருணையை யுடையவன் என்பது பற்றிச் சிவபெருமானை, “கருணை நெடுங் கடலானை” என்று குறிக்கின்றார். களங்கம் - அழுக்கு. நெஞ்சில் களங்கம் உளதாய விடத்து அறியாமையிருள் படிந்து நல்லறிவை மறைத்தலால் களங்க முடையோரால் காணவியலா தொழிவது பற்றி, “களங்கர் காணத் தோற்றானை” எனவும், எளியவனாகினும் நெஞ்சிற் கள்ளமின்றி வழிபடுகின்றேனாதலால் என் அன்பை நயந்து எனக்குக் காட்சி தருகின்றான் என்பாராய், “நான் காணத் தோற்றினானை” எனவும் வடலூர் வள்ளல் எடுத்துக் கூறுகின்றார். சொல்லுதற் குரியவற்றைத் தேர்ந்து நெறிப் படுத்தி உரைக்கும் திறம் இல்லாதவன் எனத் தம்மைக் குறிப்பாராய், “சொல்லறியேன்” என்றும், அதனால் யான் சொல்லுவன பலவும் தூயவை யல்லவாயினும் அவற்றையெல்லாம் ஏற்றருளினான் என மகிழ்வாராய், “சொல்லிய புன்சொல்லை எல்லாம் ஏற்றானை” என்றும், அதனை யான் இனிது உணருமாறு என்னுடைய நெஞ்சின்கண் எழுந்தருளி இன்புறுத்துகின்றான் என்பாராய், “என் உளத்தில் எய்தினானை” என்றும் இயம்புகின்றார்.
இதனால், நான் காணத் தோன்றி, நான் சொல்லிய புன்சொற்களை ஏற்று, என்னுளத்தில் எழுந்தருளுகின்றான் என இசைத்தவாறாம். (4)
|