3948. சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு
செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில்
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற
ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம்
பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்
பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை
ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: தன்பால் அன்பு கொண்ட அடியவர் கூட்டத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டவனும், அடங்காத என் மனத்தைத் தன்னுடைய, சிவந்த அழகிய திருவடிகளில் அடங்கி அமையுமாறு பிணித்துக் கொண்டவனும், அம்பலத்தின்கண் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை யுடையவனும், அருள் ஞானம் விளங்கும் தன் திருக்கண்களால் என்னைப் பார்த்தருளினவனும், அருளே கண்ணாகக் கொண்டு பார்க்கும் திறம் இல்லாதவரைப் பாரா தொழிபவனும், பிற பொருள்களைப் பார்க்கும் தன்மை துறந்து தன் திருவருளையே யான் எப்பொழுதும் பார்த்திருக்கப் பண்ணியவனும், என்னைத் தன் திருவருளில் இழுத்தணைத்துச் சிவமாக்கிப் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்க என்று பணித்தவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு களித்திருக்கின்றேன். எ.று.
அன்பர் அல்லாதாரோடு கூடிய வழி அன்பொழுக்கம் கெடுவது நினைந்து என்னை அன்புடைய தன் அடியார் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டான் என்பாராய், “தன் அன்பரோடு என்றனைச் சேர்த்தானை” என்று தெரிவிக்கின்றார். ஐம்பொறிகளின் வழியாக எங்கும் எப்பொருளிலும் சென்று தோய்ந்து அலமருவது மனத்திற்கு இயல்பாதலின், “செறியாத மனம்” என்றும், அது சிவபெருமானுடைய திருவடிக்கண் சென்று ஒன்றி நிற்பது விளங்க, “செறியாத மனம் செறியச் செம்பொற்றாளில் ஆர்த்தானை” என்றும் கூறுகின்றார். செறிதல் - அடங்கி ஒடுங்குதல். ஆர்த்தல் - பிணித்தல். தனது திருக்கூத்தால் உயிர் வகைகள் அனைத்தும் இன்ப மெய்த அம்பலத்தில் கூத்தாடுகின்றான் என்பது பற்றி, “அம்பலத்தில் ஆடா நின்ற ஆனந்த நடத்தானை” என்று அறிவிக்கின்றார். தனது திருவருள் ஞான நாட்டம் பெற்றுத் தனது சிவக் காட்சியைப் பெற்று உயிர்கள் உய்தி பெறல் வேண்டுமென்னும் திருவுள்ளத்தால் உயிர்களை அருளொழுக நோக்குகின்றான் என்பதும் விளங்க, “அருட் கண் நோக்கம் பார்த்தானை” எனவும், அருள் நாட்டம் பெற்று அவனைப் பார்க்கும் நற்பேறு இல்லாதவரை அவன் பார்த்தருளுவதில்லை என்பது தெரிவித்தற்கு, “பாராரைப் பாராதானை” எனவும், அருளே கண்ணாகக் கொண்டு சிவத்தைப் பார்ப்பவர் பிற எவற்றையும் பார்ப்பதில்லை; பார்க்கும் நாட்டமும் அடைவதில்லை எனத் தெளிவித்தற்கு, “பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை ஈர்த்தானை” எனவும் இயம்புகின்றார். “பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க வருஞானம் பல ஞானம் அஞ்ஞான விகற்பம்” (சிவசித்தி) என்று அருணந்தி சிவனார் அறிவுறுத்துவது காண்க. திருவருள் ஞானத்தால் ஆன்மா சிவமாம் தன்மை எய்திய வழி, சிவம் செய்வன யாவும் அவ்வான்மாவும் செய்யலாம் என எண்ணுபவரும் உளராதலின் அவர் கருத்துக்கும் உடன்படுவாராய், “ஐந்தொழில் நீ இயற்று என்றான்” என இயம்புகின்றார். சிவஞான நூல்கள், “உம்பர் பிரான் உற்பத்தி யாதிகளுக் குரியன் உயிர் தானும் சிவானுபவ மொன்றினுக்கு முரித்தே” (சிவசித்தி) என்று கூறுவது காண்க.
இதனால், அருளே கண்ணாகக் கொண்டு நோக்குவார்க்குக் காட்சி வழங்கும் சிவபெருமான் பரஞானத்தால் தன்னைப் பார்ப்பவர் பிற பதார்த்தங்களைப் பார்க்காமல் பண்ணுகின்றான் என்பதைத் தெரிவித்தவாறாம். (5)
|