3949. முளையானைச் சுத்திசிவ வெளியில் தானே
முளைத்தானை மூவாத முதலா னானைக்
களையானைக் களங்கம்எலாம் களைவித் தென்னைக்
காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
இளையானை மூத்தானை மூப்பி லானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: பிறவாதவனும், பரசிவ வெளியில் தானே தோன்றி விளங்குபவனும், நாளும் முதிர்தலில்லாத முதற் பொருளானவனும், குற்றம் பொருந்திப் பின் அதனைக் களைதல் இல்லாதவனும், என்பால் உண்டாகிய குற்றம் எல்லாம் போக்கி, என்னைக் காத்தவனும், யான் செய்யும் பிழைகளைக் கருத்திற் கொண்டு கோபம் கொள்ளாதவனும், ஞான மெய்திய ஆன்மாக்கட்குச் சிவபோகம் உண்டு பண்ணுபவனும், வெறுப்பு விருப்பு ஆகியவற்றிற் பொருந்தி எக்காலத்தும் இளைப்புறுதல் இல்லாதவனும், உலகுயிர்கள் அத்தனைக்கும் மூத்தவனும், முதுமை எய்தாதவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.
வித்தாகி முளையாகி வளர்தல் இல்லாதவனாதலால் சிவனை, “முளையானை” என்று மொழிகின்றார். தத்துவவெளிக்கும் தத்துவாதீத வெளிக்கும் அப்பாலதாகிய தூய பரசிவ வெளியில் பிறர் தோற்றுவிக்கத் தோன்றாது தானே தோன்றுபவனாதலால், “சுத்த சிவ வெளியில் தானே முளைத்தானை” எனவும், மூலப் பொருளாய் மூத்து விளிதல் இல்லாதவனாதலால், “மூவாத முதலானை” எனவும் மொழிகின்றார். களங்கமுறுவதும் பின்னர் அதனைக் களைந்தெறிவதும் ஆகிய இயல்புகள் இல்லாதவன் என்றற்கு, “களையானை” என்றும், தன்னை நினைந்தடையும் உயிர்களின்பால் உள்ள குற்றமெலாம் போக்கி மீளவும் அக்குற்றங்களுக்கு ஆளாகாதவாறு காத்தருள்பவனுமாதலால், “களங்கமெலாம் களைவித்து என்னைக் காத்தானை” என்றும், செய்த பிழையை நோக்கி அது செய்தவர்களைச் சினந்து கொள்ளும் சிறுமை யில்லாதவன் என்பாராய், “என்பிழையைக் கருதிக் கோபம் விளையானை” என்றும் இயம்புகின்றார். சிவஞானத்தால் சிவப் பேறு பெறுபவர்க்குச் சிவானந்தத்தை மிகுவிப்பது பற்றி, “சிவபோகம் விளைவித்தானை” எனவும், உலகத்து உயிர்கள் விருப்பு வெறுப்புக்களை யுற்று மெலிவது இயல்பாதல் கண்டு அஃது அவன்பால் இல்லாமை புலப்பட, “வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும் இளையானை” எனவும், எல்லா வுலகங் கட்கும் பொருட்களுக்கும் முன்னே தோன்றி விளங்குபவனாதலால், “மூத்தானை” எனவும், இயல்பாகவே முதுமையுற்று மடிந்தொழியும் தன்மை யில்லாதவன் என்பாராய், “மூப்பிலானை” எனவும் எடுத்துரைக்கின்றார்.
இதனால், சுத்த சிவ வெளியில் தானே முளைத்தலும், ஆன்மாக்கட்குச் சிவபோகம் நல்குவதும், வேண்டுதல் வேண்டாமைகளால் மெலிதலும் இல்லாத இறைமைத் தன்மையை எடுத்தோதியவாறாம். (6)
|