3950. புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்
போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்
செயலானைச் செயல்எல்லாந் திகழ்வித் தானைத்
திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே
அயலானை உறவானை அன்பு ளானை
அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
இயலானை எழிலானைப் பொழிலா னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: மேகமாகவும், மழையாகவும் இடியாகவும் அவற்றிடையே தோன்றும் மின்னல் ஒளியாகவும் விளங்குபவனும், தூய சிவஞானச் செயல்களாகத் திகழ்பவனும், ஞானச் செயல்கள் பலவற்றையும் விளங்குவிப்பவனும், திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருள்பவனும், தெளிவில்லாதவருடைய உள்ளத்தின்கண் விளக்கமின்றி அயலாய் இருப்பவனும், தெளிந்தவர்க்கு நெருங்கிய உறவாகா அவருடைய உண்மை யன்பில் ஒளிர்பவனும், ஞானத்தால் தன்னை யறிந்த, நன்மக்களின் ஞான நலத்தால் அவர்களை யறிந்து அருள்பவனும், உண்மை யறிவாலன்றி உணரப்படாத இயல்புடையவனும், உயர்ந்தவனும், உலகங்களானவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.
மழை முகிலும் மழையும், அதன்கண் தோன்றும் இடியும் மின்னலும் ஆகிய யாவும் இறைவனருளால் நிகழ்வது பற்றி, “புயலானை மழையானை அதிர்ப்பினானைப் போற்றிய மின்னொளியானை” என்று உரைக்கின்றார். இதனையே சுருக்கமாகக் “கார் முகிலாய்ப் பொழிவானை” (எறும்பி) என்று நம்பியாரூரர் நவில்வது காண்க. உயிர்கட்கு ஞானம் விளைந்து சிவபோகப் பேறு எய்துவது குறித்தே இறைவனது செயல்கள் யாவும் இலங்குவது விளங்க, “புனித ஞானச் செயலானைச் செயல் எல்லாம் திகழ்வித்தானை” என்று சிறப்பிக்கின்றார். ஞானத்தால் தெளிவில்லாத மக்களின் உள்ளத்தில் வெளிப்பட விளங்காமை பற்றி, “தெளியார் உள்ளே அயலானை” என்றும், தெளிந்த அன்பர்கட்கு உறவாகியும் அன்பனாகியும் அருளுவது பற்றி, “உறவானை அன்புளானை” என்றும், ஞானத்தால் தனது பரமாந்த தன்மையை அறிந்து போற்றும் ஞானச் செல்வர்களை நன்கறிந்து பேணுவதால், “அறிந்தாரை அறிந்தானை” என்றும், அப்பெருமானை உண்மை ஞானத்தாலன்றி உணர முடியாத அருமை புலப்பட, “அறிவாலன்றி இயலானை” என்றும் கூறுகின்றார். திருநாவுக்கரசரும், “அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி அறியாதார்தம் திறந்து ஒன்றறியாதானை” (எறும்பி) என்று தெரிவிப்பது காண்க. எழில் - உயர்ச்சி; அழகுமாம். பொழில் - உலகங்கள். “செழும் பொழில்கள் பயந்து காத்தளிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன்” (சதகம்) என்று மணிவாசகப் பெருமான் மகிழ்ந்து பாடுவது காண்க. “எழிலானைப் பொழிலானை” என்பதை, எழில் ஆனைப்பொழில் ஆனானை எனக் கொண்டு அழகிய திருவானைக்கா என்னும் திருப்பதியையுடையவன் எனப் பொருள் கொள்வது முண்டு.
இதனால், புனித ஞானச் செயலும், அச்செயலைத் திகழ்விக்கும் சிவபெருமான் தன்னை அறிந்தாரை அறிந்து ஆதரிப்பதும், உண்மையறிவாலன்றி உணரப்படாத ஒட்ப முடையவன் என்பது விளக்கியவாறாம். (7)
|