3951. தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்
சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே
மேயானைக் கண்காண விளங்கி னானை
மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன
வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை
வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி
ஏயானைத் துரியநடு விருக்கின் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: எனக்குத் தாயும் தந்தையும், சற்குருவுமான பெருமானும், தமியனாகிய என்னுள்ளத்தில் பொருந்தினவனும், நான் கண்ணிற் கண்டு மகிழ விளங்குபவனும், எனக்கு மெய்ப்பொருள் ஞானமளித்தவனும், வேதங்களை ஓதி யருளிய திருவாயை யுடையவனும், வஞ்சம் சிறிதும் இல்லாத திருவுள்ளம் உடையவனும், என் போன்றார்க்கு வேண்டும் வரங்களைத் தர வல்லவனும், அழகிய அம்பலத்தில் கண்ணன்றி வேறெங்கும் பொருந்தாதவனும், துரிய நிலையின் நடு நின்று காட்சி தருபவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.
உலகுயிர்கட் கெல்லாம் தாயும் தந்தையுமாய்த் தலையளி செய்தலாலும், உயிர்கட்குக் குருவாய் எழுந்தருளி ஞான மருளுதலாலும் சிவபெருமானை, “தாயானைத் தந்தை எனக்கானானைச் சற்குருவுமானானை” எனப் புகழ்கின்றார். உலகியற் பற்றும் பாசமுமின்றித் தனிப்பட்டிருக்கும் தமது தன்மையைப் புலப்படுத்தற்கு, “தமியேன்” எனவும், தன்னுள்ளத்தின்கண் உறைவதே யன்றி அருளுருவாய்க் கண்ணிற் காண விளங்குவது பற்றி, “கண் காண விளங்குகின்றான்” என்பது தோன்ற, “தமியேன் உள்ளே மேயானைக் கண் காண விளங்கினானை” எனவும் இயம்புகின்றார். பொருட்களின் மெய்ம்மையை யுணரும் மெய்யுணர்வைத் தமக்களித் துள்ளான் என்றும், அதுதானும் வேதங்கள் சொன்ன மெய்ப்பொருள் என்பது குறிப்பாய் விளங்க, “வேதம் சொன்ன வாயான்” என்றும் ஓதுகின்றார். வஞ்சனை செய்யாத மனமும், அன்பர்க்கு வேண்டும் வரங்களைக் கொடுக்கும் வள்ளன்மையும், அம்பலத்தின்கண் எழுந்தருளும் இன்ப நலமும் உடையவன் என்பாராய், “வஞ்சமிலா மனத்தினானை வரம் கொடுக்க வல்லானை மணிமன்றன்றி ஏயானை” என இயம்புகின்றார். துரிய நிலையிலிருந்து யோக நெறியில் புருவ நடுவில் நோக்கும் சிவயோகிகட்குக் காட்சி தருதலால், “துரிய நடு இருக்கின்றானை” எனச் சொல்லுகின்றார்.
இதனால், அன்பர் உள்ளத்தே இருந்து மெய்யுணர்வு தந்து வரம் பலவும் கொடுத்துத் துரிய நடுவில் எழுந்தருளும் சிவனுடைய திறங்களைச் செப்பியவாறாம். (8)
|