3952.

     தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத்
          தானேதா னானானைத் தமிய னேனைக்
     குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்
          குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி
     அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை
          அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால்
     இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை
          எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

உரை:

     எங்கும் எல்லாமாய்ப் பரந்து நிறைந்திருப்பவனும், தனக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லாதவனும், பிறிதொன்றின் கலப்பின்றித் தானே தானாக இருப்பவனும், தமியனாகிய என் மனமுருகிக் குழையச் செய்பவனும், எளியவனாகிய என் கையில் சமரச சன்மார்க்கமென்னும் ஞானக் கொடையை நல்கினவனும், ஞானக் குறையுற்று யான் நின்றேனாக என்னை அருட் குறிப்புடன் பார்த்துத் தன்பால் அழைத்துக் கொண்டவனும், திருவருள் ஞானமாகிய அமுதத்தை எனக்குத் தருபவனும், என்னுள்ளத்தில் எழுந்த அச்சங்கள் யாவற்றையும் போக்கினவனும், என்னுள் அன்பே நிறையச் செய்தவனும், என்னுடைய இதயக் கமலத்தில் எழுந்தருளி இருப்பவனுமாகிய எங்கள் சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். எ.று.

     எவ்விடத்தும் எப்பொருளிலும் கலந்து பரந்து ஒன்றி யிருப்பது பற்றி, “தழைத்தானை” என்றும், இங்ஙனம் தழைத்திருக்கும் தன்மையால் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாதல் பற்றி, “தன்னை ஒப்பார் இல்லாதானை” என்றும் இயம்புகின்றார். “ஒப்பொருவரில்லாத ஒருவன் தன்னை” (ஆரூர்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. பரம்பொருளாகிய தான் எல்லாப் பொருள்களிலும் எல்லா வுயிர்களிடத்தும் கலந்திருப்பினும் தன்னை யொன்றும் கலத்தலில்லாத செம்பொருளாதலால் அவனை, “தானே தானானான்” என்று கூறுகின்றார். உலகியல் மயக்கத்தில் மயங்கி உறைப்புண்டு இருக்கும் தன்னுடைய மனத்தைச் சிவனருளில் செலுத்திக் கரைந்து குழையச் செய்தல் பற்றி, “தமியனேனைக் குழைத்தானை” என்றும், தமது வாழ்வில் எங்கும் எப்பொழுதும் சமரச சன்மார்க்க நெறியையே பொருளாகக் கொண்டொழுகச் செய்தமை புலப்பட, “என் கையில் ஓர் கொடை தந்தானை” என்றும் உரைக்கின்றார். தாம் மேற்கொண்ட கொள்கைக்குத் தடை பல தோன்றினமையால் மனத்தில் பெருங் குறையுற்று வருந்திய போது அச்சம் நீக்கித் தன்னை மேற் கொண்ட நெறியிலேயே நிலைபெறச் செய்தமை விளங்க, “குறை கொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி அழைத்தானை” எனவும், அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் அருளினமை தோன்ற, “அருளமுதம் அளிக்கின்றானை அச்சமெலாம் தவிர்த்தானை” எனவும், இடையிடையே தோன்றிய தடைகளால் மனம் சலிப்புற்று அன்பு நீங்காவாறு நிறைவித்தமை தெரிவித்தற்கு, “அன்பே என்பால் இழைத்தானை” எனவும் வடலூர் வள்ளல் எடுத்துரைக்கின்றார். எக்காலத்தும் தமது இதயத்தில் எழுந்தருளி மகிழ்விப்பது விளங்க, “என் இதயத்து இருக்கின்றானை” என இசைக்கின்றார்.

     இதனால், இறைவனுடைய செம்மைத் தன்மையும் சமரச சன்மாரக்க ஞானத்தைச் சிவனருளிய நலத்தையும் எடுத்தோதியவாறாம்.

     (9)