3955. துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
என்பொலா மணியை என்சிகா மணியை
என்னிரு கண்ணுள்மா மணியை
அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
எந்தையைக் கண்டு கொண் டேனே.
உரை: துன்பங்கள் எல்லாவற்றையும் போக்கி யருளிய துணைவனும், என் உள்ளத்திற் படிந்த குற்றங்கள் எல்லாவற்றையும் நீக்கி மெய்ம்மையான சுகத்தைத் தருபவனும், என்னுடைய துளைக்கப் படாத மணியாகவும், என் முடி மணியாகவும், என்னுடைய இரண்டு கண்களிலுமுள்ள கருமணியாகவும் விளங்குபவனும், அன்பனைத்தும் என்னுள்ளம் நிறையுமாறு கொடுத்தருளிய அம்பலத் தமுதனும், அருட் பெருஞ் சோதியும், அடியேனுடைய எலும்பை யுருக்கி இன்ப வகைகள் எல்லாவற்றையும் அளித்துதவிய எந்தையுமாகிய சிவபெருமானைக் கண்டு கொண்டேன். எ.று.
உயிர்களைத் தாக்கும் துன்பங்கள் எண்ணிறந்த வகையன; அவையனைத்தையும் போக்குதற்கு அறிவு துணை புரிந்த அருட் செயல் பற்றி இறைவனை, “துன்பெலாம் தவிர்த்த துணை” என்றும், அத்துன்பங்கட்கெல்லாம் ஏது உள்ளத்திற் படியும் குற்றங்களாதலால் அவற்றைப் போக்கி அழியா ஞான சுகத்தைத் தந்தமை தோன்ற, “என்னுள்ளத் துரிசெலாம் தொலைத்த மெய்ச் சுகத்தை” என்றும் சொல்லுகின்றார். பொல்லா மணி என்பது பொலா மணி என வந்தது. பொள்ளா மணி என்பதன் மரூஉ. சிகாமணி முடியில் அணியும் மணி வகை. கண்களில் உள்ள கருமணியைக் “கண்ணுள் மாமணி” என்று குறிக்கின்றார். மாமணி - கருமணி. நம் உள்ளத் தெழும் அன்பனைத்தும் அம்பலத்தாடும் பெருமானிடமே சென்று சேர்வது பற்றி, “அன்பெலாம் அளித்த அம்பலத்தமுது” என்று அறிவிக்கின்றார். அருளாகிய பேரொளியே அவனுடைய திருவுரு என்பது பற்றி, “அருட் பெருஞ் சோதி” எனப் பன்முறையும் எடுத்தோதிப் பராவுகின்றார். “ஆதியும் அந்தமுமில்லா அரும் பெருஞ் சோதி” எனச் சான்றோர் கூறுவதால், “அருட் பெருஞ் சோதி” என வடலூர் வள்ளல் அடிக்கடி எடுத்தோதுவர். அன்புடன் நோக்குவார்க்கு உடம்பிலுள்ள எலும்புகளெல்லாம் உருகச் செய்து மெய்ம்மையான இன்பம் அளிப்பது இறைவன் இயல்பாதலின், “என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த எந்தையைக் கண்டு கொண்டேனே” என உரைக்கின்றார். “என்புருகிப் பாடுகின்றிலை” (சதகம்) எனவும், “என்பெலாம் உருக நோக்கி அம்பலத்தாடுகின்ற என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருக மாட்டா அன்பிலாதவர்” (அச்சப்) எனவும் மணிவாசகப்பெருமான் உரைப்பது காண்க. என் பொலா மணி, என் சிகாமணி, என் கண்ணுள் மாமணி என்பன ஆர்வ மொழிகள் எனப்படும்.
இதனால், தம்முடைய என்பெல்லாம் உருக்கி இன்பமெல்லாம் இறைவன் அளித்த நலத்தை எடுத்தோதியவாறாம். (2)
|