3956. சிதத்திலே ஊறித் தெளிந்ததெள் அமுதைச்
சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
பரம்பர வாழ்வைஎம் பதியை
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
மருந்தைமா மந்திரந் தன்னை
இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
இறைவனைக் கண்டுகொண் டேனே.
உரை: என் சித்தத்திலே சுரந்து பெருகித் தெளிந்து விளங்கும் தெள்ளிய அமுதமானவனும், சித்துக்களெல்லாம் செய்ய வல்ல மெய்ப் பொருளாகிய சிவனும், உண்டற்குரிய பக்குவமுறப் பழுத்திருக்கும் ஒப்பற்ற பெரிய பழம் போல்பவனும், பரம்பர வாழ்வை யுடையவனும், எங்கட்குத் தலைவனும், மத மென்னும் செருக்கினால் மயங்காத நல்லறிவின்கண் விளங்குகின்ற மருந்து போல்பவனும், பெரிய மந்திரமானவனும், செம்மை நிலையில் என்னை நிற்பித்து ஆட்கொண்டருளிய இறைவனுமாகிய சிவபெருமானைக் கண்டு கொண்டேன். எ.று.
சிதம் - சித்தத்தின் மேற்று. இது சிந்தை என்றும் வழங்கும். “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன ஐயாறன் அடித்தலம்” (ஐயா) என்று திருநாவுக்கரசர் கூறுவ தறிக. அணிமா முதலிய எண்வகைச் சித்திகளையும் செய்ய வல்ல சித்தனாய்த் தோன்றிச் சிவபெருமான் திருவிளையாடல் புரிந்தாராதலின், “சித்தெலாம் வல்ல மெய்ச் சிவம்” என்று கூறுகின்றார். பதம் - உண்டற்குரிய பக்குவம். காய்த்துப் பக்குவமுறப் பழுக்கும் உலகியற் பழம் போலின்றி எடுத்த எடுப்பிலேயே பக்குவமுறப் பழுத்து விளங்கும் தனிப் பெருமை யுடையது சிவமாகிய கனி என்றற்கு, “பதத்திலே பழுத்த தனிப் பெரும் பழம்” என்று பகர்கின்றார். சிவபோக வாழ்வு மேன் மேலாய் உயர்ந்ததாகலின் அதனை, “பரம்பர வாழ்வு” எனக் குறிக்கின்றார். காமம், குரோதம் என வரும் அறுவகைக் குற்றங்களில் மதம் எனும் செருக்கு அறிவை மயக்குவதாதலால், அதன்கண் மயங்கும் மக்கள் அறிவைப் போலாது குற்றமில்லாத ஞானவான்களின் ஞான உள்ளத்தில் தோன்றி இன்புறுத்தும் ஞான மருந்தாதலால் சிவனை, “மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்து தன்னை” எனவும், மந்திரப் பொருளாவது பற்றி, “மாமந்திரம்” எனவும், செம்மை நெறியிலே நிறுத்தித் திருவருள் ஞானத்தை வழங்கித் தன்னை ஆட்கொண்டமை விளக்குதற்கு, “இதத்திலே என்னை இருத்தி ஆட்கொண்ட இறைவனைக் கண்டு கொண்டேனே” எனவும் இயம்புகின்றார்.
இதனால், தன்னைச் செம்மை நெறியில் நிறுத்தி, அருள் வழங்கித் தம்மை இறைவன் ஆட்கொண்ட திறத்தைத் தெரிவித்தவாறாம். (3)
|