3957.

     உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
          ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
     புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
          பொருளைஎன் புண்ணியப் பயனைக்
     கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
          குருவைஎண் குணப்பெருங் குன்றை
     மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
          வள்ளலைக் கண்டுகொண் டேனே.

உரை:

     மெய்யுணர்ந்த பெரியோர்களின் உள்ளத்தில் எழுந்தருளுவது போல என்னுள்ளத்தில் அமர்ந்தருளும் ஒப்பற்ற பெரிய தலைவனும், எனக்கு உவகை தருபவனும், என்னுட் கூடிக் கலந்து தனது சிவபோகத்தைத் தந்தருளினவனும், என்னுடைய பொருளானவனும், எனது புண்ணியப் பயனாகப் பொலிபவனும், தன்னொடு கொண்டு வந்து என் கையிலே ஞானமாகிய ஒப்பற்ற பொருளைக் கொடுத்தருளிய குருமுதல்வனும், எண் வகைக் குணங்களும் ஒருங்கமைந்த பெரிய குன்று போல்பவனும், மணம் கமழ்கின்ற செங்குவளை மலரை எனக்குத் தந்து மகிழ்வித்த வள்ளலுமாகிய சிவபெருமானைக் கண்டு கொண்டேன். எ.று.

     மெய்ப்பொருளை யுணர்ந்த பெரியோர்களை “உணர்ந்தவர்” என்பர். அப்பெருமக்களின் திருவுள்ளத்தில் எப்பொழுதும் எழுந்தருளுவது இறைவனது இயல்பாதலால் அவர்களது உள்ளம் போலத் தமது உள்ளத்தையும் கருதி இறைவன் எழுந்தருளுகின்றான் என்பாராய், “உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்தமர்ந்த ஒரு பெரும் பதி” என்று உரைக்கின்றார். உவப்பைத் தருதலால் “உவப்பு” என்றும், சிவபோகத்தை நல்குவதால் “போகம்” என்றும் புகழ்கின்றார். பரம் பொருளாகிய சிவனை யல்லது பொருள் எனப்படும் பிற வனைத்தும் அசத்தாதலால் அவற்றைப் பொருள் எனக் கொள்ளாது சிவத்தையே பொருள் எனப் புகழ்வாராய், “எனது பொருள்” என இயம்புகின்றார். குருமுதல்வனாய் எழுந்தருளிச் சிவஞானமாகிய ஒப்பற்ற பொருளைத் தனக்குத் தந்தமை விளங்க, “கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குரு” என்று கூறுகின்றார். எண்வகைக் குணங்களும் ஒருங்கு திரண்டு சலியாமையும் திண்மையும் கொண்டு விளங்குவது போலச் சிவனது அருளுருவம் காணப்படுவது பற்றி, “எண்குணப் பெருங்குன்று” என்று ஏத்துகின்றார். எண் குணங்களாவன : தன் வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவில் ஆற்றலுடைமை, வரம்பில் இன்பமுடைமை என்பனவாம். இறைவன் வடலூர் வள்ளலுக்குச் செங்குவளை மலரளித்த வரலாறு தெரிந்திலது.

இதனால், ஒருகால் சிவபெருமான் வடலூர் வள்ளலுக்குச் செங்குவளை மலர் அளித்த திறமொன்று தெரிவிக்கப்பட்டவாறாம்.

     (4)