3958.

     புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
          பொற்சபை அப்பனை வேதம்
     சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
          ஜோதியைச் சோதியா தென்னை
     மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
          மன்னிய பதியைஎன் வாழ்வை
     எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
          இறைவனைக் கண்டுகொண் டேனே.

உரை:

     தாழ்வு பயக்கும் நெறியின்கண் செல்லாமல் தடுத்து என்னை ஆண்டு கொண்ட பொற் சபையில் விளங்கும் அப்பனாகிய கூத்தப் பெருமானும், வேதம் சொல்லியபடியாக என்னுடைய சொற்களையும் ஏற்றுக் கொண்ட அருட் சோதியும், என்னைச் சோதிக்காமல் எனக்கு மல்லிகை மாலையை அணிந்து, என்னுள் கலந்து நிலையாய் இருக்கும் தலைவனும், என்னுடைய வாழ்வாகியவனும், பகலும் இரவும் என்னை விட்டு நீங்காமல் இருக்கும் இறைவனுமாகிய சிவபெருமானைக் கண்டு கொண்டேன். எ.று.

     ஞானம் பயந்து வீடு பேறு நல்கும் செந்நெறியினும் ஏனைய பலவும் தாழ்வு தருவனவாதலால் அவற்றைப் புல்லிய நெறி யெனப் புகன்று அந்நெறியில் செல்லாவாறு இளமையிலே தம்மை அம்பலக்கூத்தன் ஆட்கொண்ட நலத்தை ஓதுவாராய், “எனை எடுத்தாண்ட பொற்சபை அப்பன்” எனவும், அவன் ஓதிய வேத உரைகளைப் போல என் சொற்களையும் ஏற்றருளினான் என்பாராய், “வேதம் சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட சோதி” எனவும் சொல்லுகின்றார். அன்பர்களின் அன்பின் பெருமையை உலகறியச் செய்தல் வேண்டிப் பலவகையால் சோதிப்பது இறைவன் செயலாகவும் அது செய்யாமல் தன்னை ஆட்கொண்டமை புலப்பட, “என்னைச் சோதியாது” என இயம்புகின்றார். ஒருகால் தன்பால் எழுந்தருளி மல்லிகை மாலையை அணிந்து மகிழ்வித்த செய்தி யொன்றை, “மல்லிகை மாலை யணிந்து உளே கலந்து மன்னிய பதி” என மொழிகின்றார். மல்லிகை மாலை யணிந்த வரலாறு தெரியவில்லை. இரவு பகல் என்ற வேற்றுமையின்றித் தம் முன்னே எப்பொழுதும் இறைவன் தங்குகின்றான் என்ற வுண்மையை, “எல்லியும் இரவும் என்னை விட்டகலா இறைவனைக் கண்டு கொண்டேனே” என எடுத்துரைக்கின்றார்.

     இதனால், புன்னெறியினின்றும் நீக்கி, நன்னெறிக்கண் தன்னை நிறுத்திச் சோதித்தலின்றித் தனக்கு மல்லிகை மாலை யணிந்து மகிழ்வித்த செய்தி விளம்பியவாறாம்.

     (5)