3959. பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
பதியுமாம் ஒருபசு பதியை
நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
நல்கிய கருணைநா யகனை
எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
இறைவனை மறைமுடி இலங்கும்
தண்ணிய விளக்கைத் தன்னிகர் இல்லாத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
உரை: செய்த தவமும் அதன் பயனும் மெய்ம்மையாகப் பயன் விளைவிக்கச் செய்யும் தலைவனுமாம் ஒப்பற்ற பசுபதியாகிய சிவனும், என்பால் அடைந்து, என் மனத்தைத் தன் மனமாக்கி யருளிய கருணையுருவாகிய நாயகனும், நான் எண்ணியபடியே எனக்கு அருள் புரிந்த இறைவனும், வேதத்தின் உச்சியில் விளங்கும் குளிர்ந்த ஒளி விளக்கும், தனக்கு ஒப்பில்லாத தந்தையுமாகிய சிவபெருமானைக் கண்டு மகிழ்ந்தேன். எ.று.
செய்கின்ற தவமும், அதன் பயனும், அப்பயனைத் தவம் செய்த பெரியவர்க்குச் சேர்ப்பிக்கும் தலைவனும் சிவமேயாதல் தோன்ற, “பண்ணிய தவமும் பலமும் மெய்ப் பலஞ் செய் பதி” என்று பகர்கின்றார். தவமாகிய வினையும் அதன் பயனும் அறிவில்லாத பொருட்களாதலால், அவற்றைத் தவஞ் செய்தவர்க்குச் சேர்ப்பித்தல் அறிவுடைய பரம்பொருளாகிய சிவனது அருட் செயலாதலால், “தவமும் பலமும் மெய்ப்பலஞ் செய் பதி” என்று கூறுகின்றார். அப்பெருமான் மலத்தால் கட்டுண்டு உலகிற் பிறந்து வருந்தும் உயிர்கட்குத் தலைவன் என்பது பற்றிச் சிவனை, “பசுபதி” என்று குறிக்கின்றார். அப்பெருமான் அன்பர் உள்ளத்தை யடைந்து தன் அருளொளியால் சிவ மயமாக்கி ஞான இன்பம் அருளுகின்றான் என்று பெரியோர் உரைப்பதால், “நண்ணி என் உளத்தைத் தன்னுளமாக்கி நல்கிய கருணை நாயகனை” என்று நவில்கின்றார். அன்பர்கள் எண்ணிய எண்ணியாங்கு எய்த அருளும் இறைவனாதல் தோன்ற, “எண்ணிய படியே எனக்கு அருள் புரிந்த இறைவன்” என இயம்புகின்றார். வேதங்களின் உச்சியில் ஞான ஒளி விளக்காய் ஒளி செய்து இன்புறுத்துவது பற்றி, “மறைமுடி இலங்கும் தண்ணிய விளக்கு” என்று இசைக்கின்றார். ஒப்பு ஒருவரும் இல்லாதவனாதலின் சிவனை, “தன்னிகர் இல்லாத் தந்தை” என்று பாராட்டுகின்றார்.
இதனால், செய்வினையையும் அதன் பயனையும் நோக்கி அப்பயன் செய்தவனையே அடையச் செய்து அன்பர் உள்ளத்தைச் சிவ மயமாக்கி எண்ணிய எண்ணியபடி எய்த அருளும் இறைவனது அருட்டன்மையை விளக்கியவாறாம். (6)
|