3960.

     பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
          பிறங்கிய பொதுமையைப் பெரிய
     தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
          சாமியைத் தயாநிதி தன்னை
     வண்மையை அழியா வரத்தினை ஞான
          வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
     உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
          ஒருவனைக் கண்டுகொண் டேனே.

உரை:

     விளங்குகின்ற பெண்மையும் ஆண்மையும், அவ்விரண்டுமன்றி ஏனைய எல்லாவற்றினும் உயர்ந்து நிற்கும் பொதுமையும், அருள் நலத்தால் பெரிய தட்ப உருவையும், எல்லாம் செய்ய வல்லதாகிய ஒப்பற்ற சித்தராகிய சாமியும், தயாநிதியும், வள்ளன்மையும், அழியா வரத்தினையும், ஞான வாழ்வையும், தருவதும், என் அறிவில் விளங்கும் உண்மைப் பொருளும், என்னுடைய உயிரும், என் உயிருள் உயிராய் எழுந்தருளும் ஒருவனுமாகிய சிவபெருமானைக் கண்டு கொண்டேன். எ.று.

     பெண்மை, ஆண்மை, பொதுமை, தண்மை, வண்மை, உண்மை என்ற குணங்களைக் குணியாக வைத்து உரைப்பது செய்யுள் மரபாதலின் இக்குணங்களை யுடைய சிவபெருமானைப் பெண்மை முதலாகக் குறித்துரைக்கின்றார். ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்குவது இறைவன் செயலாதல் பற்றி, “வயங்கும் பெண்மையை ஆண்மையை” என்று உரைக்கின்றார். ஆண் என்றும் பெண் என்றும் பகுக்கலாகாப் பொருட்களனைத்திலும் இறைவன் கலந்திருப்பது பற்றி, “அனைத்தும் பிறங்கிய பொதுமை” என்று புகல்கின்றார். வரம்பில் ஆற்றலுடைய பெருமானாதலால், “எல்லாம் வல்ல ஓர் சித்த சாமி” என்று கூறுகின்றார். வரையாது அருளும் சிறப்பு நோக்கி, “வண்மை” எனவும், பொய்த்தல் இல்லாத வரங்களையும் ஞான இன்பம் நிறைந்த வாழ்வையும் தருபவன் எனப் புகழ்வாராய், “அழியா வரத்தினை ஞான வாழ்வை” எனவும் நவில்கின்றார். வரந் தருபவனை “வரம்” என்றும், ஞான வாழ்வு அளிக்கும் நலம் பற்றி, “ஞான வாழ்வு” என்றும் மொழிகின்றார். மெய்யறிவாய் உயிரறிவில் இருந்து உண்மை யுணர்த்துவது பற்றிச் சிவனை, “மதியிலே விளங்கும் உண்மை” என்றும், உயிர்க்குயிராய் ஒளிர்வதால் அப்பரம்பொருளை, “என்றன் உயிரை என்னுயிருள் ஒருவனைக் கண்டு கொண்டேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், இறைவனது எல்லாமாய் இருக்கும் தன்மை எடுத்தோதியவாறாம்.

     (7)