3961. ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
அறிவித்த அறிவைஎன் அன்பைச்
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த
நிலையிலே நிறைந்தமா நிதியை
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
உரை: எந்தப் பொருட்கும் ஆதியும், எவற்றிற்கும் ஆதியும் அந்தமும் இது வென உணருமாறு உள்ளிருந்து உணர்த்திய உணர்வும், எனது அன்பும், ஒளியும், என்னுடைய துணையும், எனக்குரிய சுகமும், யான் மேற் கொண்ட சுத்த சன்மார்க்கத்தின் முடி பொருளும், நீதியும், எல்லா வகை நிலைகளையும் கடந்ததாகிய மேல் நிலையில் நிறைந்து விளங்கும் பெரிய செல்வமும், எல்லா அறிவு நூல்களையும் ஓதியவனும், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் பாராமலே உணர்த்துகின்ற ஞான வெளியும், ஒளியுமாகிய சிவனைக் கண்டு கொண்டேன். எ.று.
உலகுகள் அத்தனைக்கும் ஆதியாகிய பெருமானாதலால் சிவனை, “ஆதி” எனத் தெரிவிக்கின்றார். தனது அருட் சத்தியால் மாயையைக் கலக்கிப் பலவேறு அண்டங்களையும், அவற்றினுள் அடங்கிய உலகங்களையும் உலகப் பொருட்களையும் படைத்தளிக்கும் பரமன் என ஞான நூல்கள் உரைப்பதால் இவ்வாறு கூறுகின்றார் எனினும் அமையும். பொருள் வகைகளின் தோற்றமும் முடிவும் இவை யென்று நுணுகி யறியும் அறிவு தந்திருக்கின்றமை பற்றி, “ஆதி யந்த மீதென உள் அறிவித்த அறிவு” என மொழிகின்றார். தாம் மேற்கொண் டொழுகுகின்ற சுத்த சன்மார்க்கத்தின் முடிபொருள் சிவமாதல் பற்றி அதனை, “சுத்த சன்மார்க்கத்தின் துணிபு” என்று மொழிகின்றார். “நீதி பலவும் தன்னவுருவாம்” என்று ஞானசம்பந்தர் முதலியோர் உரைப்பதால் சிவனை, “நீதி” என்றும், உயிர்கள் தம் செய்வினைகளால் எய்துதற் குரியவாய் மேல் மேலாய் விளங்கும் பதங்கள் பலவாதலின் அவை எல்லாவற்றுக்கும் அப்பாலாய் நிறைந்து விளங்கும் போகப் பொருளாய்ப் பொலிவது பற்றி, “எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மாநிதி” என்றும் விளக்குகின்றார். மக்கள் நிலைக்கு மேல் இந்திர பதம், வைகுண்ட பதம், பிரம்ம பதம், சிவ பதம் என நிலைகள் பலவாதலின், “எல்லா நிலைகளும் கடந்த நிலை” என்று கூறுகின்றார். எல்லா நூல்களாலும் ஓதப்படும் உண்மைப் பொருளாதல் பற்றிப் பரம்பொருளை, “ஓதி” எனவும், எல்லா நூல்களையும் ஒவ்வொன்றாக ஓதி யுணரும் உயிர்கள் போலின்றி யாவற்றையும் ஒருங்கே குறைவறப் பிறர்க்கு உணர்த்துகின்ற பரஞான வெளிப் பொருளாதலின், “ஓதாது உணர்த்திய வெளியை” எனவும், ஞான ஒளி யுடைமை பற்றி, “ஒளி” எனவும் உரைத்தருளுகின்றார்.
இதனால், எல்லாவற்றுக்கும் தானே ஆதியும் அந்தமுமாதலேயன்றிப் பிற பொருட்கள் எல்லாவற்றிற்கும் உள்ள ஆதி யந்தங்களை அறியும் வாய்ப்பை அருளும் அறிவுருவாகிய இறைவன் இயல்பு தெரிவித்தவாறாம். (8)
|