3962.

     என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
          என்னைவாழ் விக்கின்ற பதியைப்
     பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்ே­த
          பொருந்திய மருந்தையென் பொருளை
     வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
          வைத்தசன் மார்க்கசற் குருவைக்
     கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
          கோயிலில் கண்டுகொண் டேனே.

உரை:

     யான் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் தன் செயலாகக் கொண்டு, என்னைத் தனது அருள் வாழ்வில் வாழச் செய்கின்ற தலைவனும், சிவபோகத்திற் குரியவாய் யான் செய்தற் குரியவாகிய செயல் வகைகளை எனக்கு அறிவித்து என் உள்ளத்தில் எழுந்தருளுகின்ற தெய்வ மருந்து போல்பவனும், எனக்குப் பொருளாகுபவனும், வன்செயல்கள் யாவும் இல்லாதபடி போக்கி உலகமெங்கும் நற்செயல்களே விளங்க வைத்தருளுபவனும், சன்மார்க்க ஞான குருவுமாகிய சிவனைப் பயனில் செயல்களே இல்லாத சத்திய ஞானமாகிய கோயிலில் கண்டு கொண்டேன். எ.று.

     தன்பால் மெய்யன்பு கொண்டு தன்னுடைய கருவி கரணங்கள் யாவும் சிவ கரணங்களாகத் திகழ்கின்ற அன்பர்களை அவர்கள் செய்யும் வினைகள் அவர்களைப் பற்றாதபடி விலக்கி யருளும் மெய்ம்மை விளங்க, “என் செயலனைத்தும் தன் செயலாக்கி என்னை வாழ்விக்கின்ற பதி” என்றும், சிவஞான யோகத்தால் சிவத்தை அடைந்தவிடத்து, “சிவனும் இவன் செய்தி யெலாம் என் செய்தி யென்றும், செய்த தெனக்கு இவனுக்குச் செய்த தென்றும், பவம் அகல உடனாகி நின்று கொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே” (சிவசித்தி) என்றும், “ஞானத்தால் தனை யடைந்தார் தம்மைத் தானாக்கித் தலைவன் அவர் தாம் செய்வினை தன்னால் நலமுடனே பிறர் செய்வினை யூட்டி ஒழிப்பானாய் நணுகாமல் வினை யவரை நாடிக்காப்பன்” (சிவசித்தி) என்றும் பெரியோர் கூறுவது காண்க. பொன் செயல் வகை என்றவிடத்துப் பொன் என்பது சிவபோகம் பெறுதற்குரிய செயல் வகை. அவற்றைத் தத்துவ ரூபம் முதல் சிவபோகம் ஈறாகப் பத்து வகையாக ஞான நூல்கள் உரைக்கின்றன. பத்துமாவன : தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவ ரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பனவாம். இச்செயல் வகையை உணர்த்திச் சிவம் பெறும் நெறியில் நிறுத்தி ஆண்டமை விளங்க, “பொன் செயல் வகையை உணர்த்தி என்னுளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை” என்று புகல்கின்றார். உலகில் நிகழ்கின்ற வன்செயல்கள் எல்லாவற்றையும் போக்கி இனிய செயல்களையே புரியுமாறு ஒழுகுவிக்கும் மெய்ம்மை நெறியாதலால் அதனை உணர்த்தியது பற்றி, “வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க வைத்த சன்மார்க்க சற்குரு” என்று கூறுகின்றார். கொன் செயல் - பயனில்லாத செயல்கள். பயனுள்ள செயல்கள் யாவும் உண்மை ஞானப் பேற்றுக்குரிய பணியாதலால், அப்பணி நிகழுமிடத்தே இறைவன் எழுந்தருளுவது புலப்பட, “கொன் செயல் ஒழித்த சத்திய ஞானக் கோயிலில் கண்டு கொண்டேனே” என்று பராவுகின்றார்.

     இதனால், சன்மார்க்க சற்குருவாய்ச் சத்திய ஞானக் கோயிலில் இறைவன் எழுந்தருளும் திறம் எடுத்தோதியவாறாம்.

     (9)