3963. புன்னிகர் இல்லேன் பொருட்டிருட் டிரவில்
போந்தருள் அளித்தசற் குருவைக்
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
கருணையங் கடவுளைத் தனது
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
தன்னிகர் இல்லாத் தலைவனை எனது
தந்தையைக் கண்டுகொண் டேனே.
உரை: புல்லுக்கும் நிகராகாத அற்பனாகிய என் பொருட்டு இருள் செறிந்த இரவின் கண் என்பால் வந்து அருள் புரிந்த சற்குருவும், கல் போன்ற என் மனத்தைக் கரையச் செய்து என்னுள்ளே கலந்து கொண்ட கருணைக் கடவுளும், தனது சொல்லுக்கு ஒப்பாம் என என் சொற்களை யெல்லாம் ஏற்றுக் கொண்டு என் தோளில் மாலை யணிந்து மகிழ்வித்த மெய்யான துணைவனும், தனக்கு ஒப்பார் ஒருவருமில்லாத தலைவனுமாகிய என் தந்தையாகிய சிவபெருமானைக் கண்டு கொண்டேன். எ.று.
தமது புன்மையும் எளிமையும் சிறுமையும் புலப்படுத்தற்கு, “புன்னிகர் இல்லேன்” என்றும், ஒருகால் இருள் திணிந்த இரவுப் போழ்தின்கண் தம்மிடம் சற்குரு வடிவில் வந்து ஞானம் அளித்த செயல் விளங்க, “இருட் டிரவில் போந்து அருள் அளித்த சற்குரு” என்றும் சாற்றுகின்றார். கல்லைப் போல் உருகிக் கரைதல் இல்லாத தமது மனத்தின் இயல்பை, “கன்னிகர் மனத்தைக் கரைத்து” எனவும், பின்னர் அதனுட் கலந்து இன்புறுத்திய திறம் விளங்க, “என்னுட் கலந்த கருணையங் கடவுள்” எனவும் கூறுகின்றார். தான் பாடுகின்ற பாட்டுக்களையும் சொல்லுகின்ற சொற்களையும் அன்புடன் ஏற்றுத் தமது தோளில் மாலை யணிந்து சிறப்பித்தமை தோன்ற, “தனது சொல் நிகரென என் சொல் எலாம் கொண்டே தோளுறப் புனைந்த மெய்த் துணையே” என்று சொல்லுகின்றார்.
இதனால், யான் சொல்லுவனவற்றைத் தான் சொல்லுவனவாகக் கொண்டு தன்னை இறைவன் சிறப்பித்தமை தெரிவித்தவாறாம். (10)
|