3964.

     ஏங்கலை மகனே தூங்கலை எனவந்
          தெடுத்தெனை அணைத்தஎன் தாயை
     ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
          உடையஎன் ஒருபெரும் பதியைப்
     பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்
          பரிசும்இங் களித்ததற் பரத்தைத்
     தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்
          தலைவனைக் கண்டுகொண் டேனே.

உரை:

     ஒருநாள் என்பால் வந்து என்னை எடுத்து மகனே, நீ கலக்கத்தால் ஏங்குவதும், சோம்பித் தூங்குவதும் கைவிடுக என்று சொல்லி என்னை அன்புடன் அணைத்துக் கொண்ட எனக்குத் தாயும் உயர்ந்த தந்தையுமாகியவனும், என் உடல், ஆவி, உயிர், பொருள் ஆகிய எல்லாம் தனக்கு உரிமையாக யுடைய ஒப்பற்ற பெரிய தலைவனும், நண்பனைப் போல் என்னை அன்புடன் ஆண்டு கொண்டு எல்லா நலங்களையும் இவ்வுலகில் எனக்குத் தந்தருளிய தற்பரனும், நீதியுருவாய் எல்லா உயிர்களையும் தாங்கி யருளுகின்ற ஒப்பற்ற பெரிய கருணை யுருக் கொண்ட தலைவனுமாகிய சிவபெருமானை யான் கண்டு கொண்டேன். எ.று.

     தாயும் தந்தையும் போல என்பால் வந்து எனக்கு அருள் ஞானம் வழங்கினாய் என்பாராய், “ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்தெனை யணைத்த என் தாய் ஓங்கிய எனது தந்தையை” என வுரைக்கின்றார். உலகங்கள் அத்தனையும் அவற்றின்கண் உள்ள பொருட்களையும் தனக்கு உடைமையாகவும் உயிர்களைத் தனக்கு அடிமையாகவும் உடையவனாதலாலும், ஆட்பட்ட உயிர்களின் உடல் பொருள் அத்தனையும் ஏன்று கொள்வதனாலும் சிவபெருமானை, “எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதி” என இயம்புகின்றார். உண்மை நண்பனைப் போலத் தன்பால் அன்பு கொண்டு எல்லா அறிவு நலன்களையும் ஞானங்களையும் அளித்தருளுவது பற்றி, “பாங்கனில் என்னைப் பரிந்து கொண்டு எல்லாப் பரிசும் இங்களித்த தற்பரத்தை” என்று எடுத்தோதுகின்றார். தன்னின் வேறு பரமாய பொருளில்லாத தனிப் பரம் பொருளாதல் பற்றிச் சிவத்தை, “தற்பரம்” எனச் சிறப்பிக்கின்றார். நீதியும் கருணையும் உருவாகக் கொண்டவனாதலால், “நீதித் தனிப் பெருங் கருணை” என்று ஓதுகின்றார். எவ்வுயிரையும் தாங்கும் நீதியும் எவ்வுயிர்க்கும் நலம் புரியும் பெருங் கருணையும் ஒரு தலைவனுடைய தலைமைக்கு இலக்கணமாதலின், “தாங்கும் ஓர் நீதித் தனிப் பெருங் கருணைத் தலைவன்” என்று புகழ்கின்றார்.

     இதனால், இறைவன் தாய் தந்தையாகவும், பதியாகவும், பாங்கனாகவும், தலைவனாகவும் அருள் புரியும் திறம் தெரிவித்தவாறாம்.

     (11)