3965. துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
அன்புளே கலந்த தந்தையை என்றன்
ஆவியைப் பாவியேன் உளத்தை
இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
இனிதமர்ந் தருளிய இறையை
வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
வள்ளலைக் கண்டுகொண் டேனே.
உரை: மகனே! மனத்தில் துன்பம் கொண்டு சோம்பி இராதே என்று சொல்லி எனக்கு உண்டாகிய மனச் சோர்வுகள் அனைத்தையும் போக்கிய நல்ல தாயும், உள்ளத்திலே அன்பு நிறைவித்த தந்தையும், என்றன் உயிரும், பாவியாகிய என்னுடைய மனத்தின்கண் இன்பம் நிறையச் செய்து அருளுரு உடையதாக்கி அதன்கண் இனிது எழுந்தருளிய இறைவனும், வன்மையே யில்லாத கருணையாகிய பெரிய செல்வ மென்று சிறப்பிக்கப்படும் என்னுடைய வள்ளலுமாகிய சிவபெருமானைக் கண்டு கொண்டேன். எ.று.
மக்களுக்குக் கவலையும் கையறவும் தோன்றியபோது இனிய சொற்களைச் சொல்லித் தேற்றி உடலும் உள்ளமும் எய்தும் சோர்வுகளைப் போக்குவதில் தந்தையினும் பெற்ற தாய் சிறந்தவளாதலின், “என் சோர்வெலாம் தவிர்த்த நற்றாய்” என்றும், அன்பும் அருளும் கொண்டு அறிவுரை வழங்குவதில் தந்தை சிறந்தமை பற்றி, “அன்புளே கலந்த தந்தையை” என்றும் போற்றுகின்றார். தான் எழுந்தருளும் பொருட்டுப் பாவியாகிய என் உள்ளத்தில் இன்பம் நிறைவித்து என்னையும் அருளுருவாக்கி அமர்கின்றான் என இறைவனைப் பாராட்டுவாராய், “பாவியேன் உளத்தை இன்பிலே நிறைவித்து அருளுருவாக்கி இனிது அமர்ந்தருளிய இறை” என இயம்புகின்றார். கருணையுடையார் பலரினும் ஒருசிலர் ஓரொருகால் வன்மை யுறுதலால் அவர்களின் நீக்கி, வன்மை சிறிதுமில்லாத கருணையாகிய பெரிய நிதி என்று சான்றோர் போற்றுதல் பற்றிச் சிவனை, “வன்பிலாக் கருணை மாநிதி எனும் என் வள்ளலைக் கண்டு கொண்டேன்” என்று வாயாரப் புகழுகின்றார்.
இதனால், இறைவன் தான் எழுந்தருளும் மக்கள் உள்ளத்தை இன்பத்தால் நிறைவித்து அவர்களையும் அருளுருவினராக்கி எழுந்தருளுகின்றான் என்ற கருத்தைப் புலப்படுத்தியவாறாம். (12)
|