3966. நனவினும் எனது கனவினும் எனக்கே
நண்ணிய தண்ணிய அமுதை
மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
வழங்கிய பெருந்தயா நிதியைச்
சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
சிவகுரு பதியைஎன் சிறப்பை
உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
உரை: என்னுடைய சாக்கிர நிலையிலும் சொப்பன நிலையிலும் என்னுள் எய்தியருளும் குளிர்ந்த அமுதம் போல்பவனும், என் மனத்தின்கண் படிந்திருக்கும் மயக்கத்தைப் போக்கி அருட் சோதியாகிய ஒளியை வழங்கி அருளுகின்ற பெரிய தயாநிதியானவனும், கோபம் முதலாகிய குற்றங்கள் ஆறையும் நீக்கி என் உள்ளத்தில் எழுந்தருளுகின்ற சிவ குருபரனும், எனக்குச் சிறந்த பொருளாகுபவனும், எண்ணுதற்கரிய பெரிய துரிய நிலையின் மேல் உள்ள அதீத வெளியில் விளங்குகின்ற ஞான ஒளிப் பொருளுமாகிய சிவபெருமானைக் கண்டு மகிழ்ந்தேன். எ.று.
கண் முதலிய பொறிகளோடு கலந்து உலகியற் பொருட்களைக் கண்ணுறும் நிலை “சாக்கிரம்” எனப்படும். அதற்குக் கீழ் கனவு காணும் உறக்க நிலை. இவ்விரு நிலைகளிலும் உயிர் தங்கும் போது சாக்கிராவத்தை என்றும், சொப்பனாவத்தை என்றும் நூல்கள் கூறும். இவ்விரு நிலையிலும் இறைவன் தம்முள் எய்திக் குளிர்ந்த அமுதம் போல் தமக்கு இனிமை செய்கின்றான் என்பாராய், “நனவினும் எனது கனவினும் எனக்கே நண்ணிய தண்ணிய அமுது” எனவும், அறிவை மயக்கும் மாயா மயக்கம் மனத்தின்கண் படிந்து உயிரறிவை அயர்விப்பது பற்றி அதனை, “மனனுறு மயக்கம்” எனவும், அதனை அருட் சோதியால் நீக்கியருளும் மிக்க பெரும் தயவுடைமை நோக்கி, “மயக்கம் தவிர்த்து அருள் சோதி வழங்கிய பெருந் தயாநிதி” எனவும் பெருமைப் படுத்துகின்றார். கோபம் முதலிய குற்றங்கள் ஆறும் காமம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், குரோதம் என்பனவாம். இவற்றால் ஆன்ம வுணர்வு மறைந்து பல குற்றங்களைச் செய்தற்கு இடமுண்டாதலால் இவற்றின் தீமையை ஞான உரைகளால் போக்குவது பற்றிச் சிவ பரம்பொருளை, “சினம் முதல் ஆறும் தீர்த்து உள்ளே அமர்ந்த சிவகுரு பதி” என்றும், தம்மால் சிறந்தவை என மதிக்கப்படும் பொருட்கள் எல்லாவற்றினும் சிவ பரம்பொருள் ஒப்பற்ற சிறப்பாய்த் திகழ்வது கொண்டு, “என் சிறப்பு” என்றும் ஏத்துகின்றார். சொப்பனத்திற்கும் கீழதாகிய சுழுத்தி நிலைக்கு அப்பால் உயிர் எய்தும் அவத்தை, “துரியம்” எனப்படும். அதன்கண் மேவுங்கால் ஆன்ம வுணர்வு செயல் படுவதன் அருமைபற்றி, “உனலரும் பெரிய துரியம்” என்று உரைக்கின்றார். துரியமும் அதற்கப்பாலதாகிய அதீதமும் அனுபவ நிலைகளாதலால் அங்குப் பரவொளியாய்ச் சிவத்தைத் தாம் கண்டதை விதந்து, “துரிய மேல் வெளியில் ஒளிதனைக் கண்டு கொண்டேன்” என உவந்து புகழ்கின்றார்.
இதனால், ஐவகை அவத்தைக் கண்ணும் ஆண்டவன் எழுந்தருளி இன்புறுத்தும் திறம் எடுத்தோதியவாறாம். (13)
|