3967. கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
ஆவியை ஆவியுட் கலந்த
பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
பேசுதற் கரும்பெரும் பேற்றை
விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
விளக்கினைக் கண்டுகொண் டேனே.
உரை: கரும்பின் இனிய சாறும், நன்கு பழுத்த முக்கனியின் சாறும், உயர்ந்ததாகக் கருதப்படும் கொம்புத் தேனின் நறிய சுவை போல்பவனும், தேவராலும் பெறுதற்கரிய அமுது போல்பவனும், என்னுடைய அறிவு அன்பு உருவாயவனும், என்னுடைய உயிரும், அவ்வுயிரில் கலந்த பெரிய ஒப்பற்ற தலைவனும், பெரிய சுகத்தால் விளையும் களிப்பானவனும், வாயால் இத்தன்மைத் தெனச் சொல்லுதற்கரிய பெரிய பேறுடையவனும், என் மனத்தை விரும்பி அதன்கண் எழுந்தருளி ஞான விளக்கம் தரும் விளக்குப் போல்பவனுமாகிய சிவ பரம்பொருளைக் கண்டு மகிழ்ந்தேன். எ.று.
கனிந்த முக்கனி எனக் கூறுவதால் கரும்பின் சாற்றை முற்றிய கரும்பின் இனிய சாறு எனக் கொள்க. கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப் பூ, நிலப் பூ எனப்படும் பலவகைப் பூக்களில் பெறலாகும் தேன் வகையுள் கோட்டுப் பூவின் தேன் மிக்க தூய்மையும் சிறப்பும் உடைய தென்பது பற்றி, “கருதுகோற்றேன்” என்று சிறப்பிக்கின்றார். கரும்பின் சாறும், முக்கனியின் சாறும், கோற் றேனும், கலந்த வழி உண்டாகும் சுவை, “நறுஞ் சுவை” என அறிக. அந்தச் சுவையைச் சிவானந்தம் தருவது பற்றிச் சிவனை, “நறுஞ் சுவை” என நவில்கின்றார். தேவர்கட்கும் பெறல் அருமை தோன்றச் சிவமாகிய அமுதத்தை, “அரும் பெறல் அமுது” என்றும், உண்மையறிவும் மெய்யன்பும் இறைவன் திருவுருவாதலால் அவனை, “அறிவு” என்றும், “அன்பு” என்றும் பாராட்டுகின்றார். உயிர்கட்கு உயிராயும், அதனுட் கலந்து நிற்கும் உயிர்க்குயிராயும், உயிர்களை வாழ்விக்கும் அருட் செயலின் சிறப்பு விளங்க, “ஆவியை ஆவியுட் கலந்த பெருந் தனிப் பதி” எனவும், அப்பெருமானால் தமக்கு எய்தும் சிவானந்த அனுபவத்தை, “பெருஞ் சுகக் களிப்பு” எனவும், சிவபோகப் பேற்றை, “வாக்கிறந்த பரிபூரணம்” என்பது பற்றிப் “பேசுதற்கு அரும் பெரும் பேறு” எனவும் மொழிகின்றார். எங்கும் எல்லாவுயிர்களிலும் பொதுவாய் உறைபவனாயினும் தமது உள்ளத்தில் சிறப்புற இடம் பெற்று ஞான இன்பம் தருவது தோன்ற, “என் உளத்தை விரும்பி இடங் கொண்டு விளங்கும் விளக்கு” எனப் பாராட்டுகின்றார்.
இதனால், இறைவன் தமது உள்ளத்தை விரும்பி எழுந்தருளி ஞான விளக்கம் தருமாற்றால் சிவானந்தத்தை நல்கிய திறம் இயம்பியவாறாம். (14)
|