3968. களங்கொளுங் கடையேன் களங்கெலாந் தவிர்த்துக்
களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
துள்ளகத் தூறும்இன் அமுதை
வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
குருவையான் கண்டுகொண் டேனே.
உரை: உலகியற் பிறப்பில் இடம் பெற்று உறையும் கடையவனாகிய என்னுடைய களங்கமெல்லாம் போக்கி ஆனந்தக் களிப்பெல்லாம் தந்தருளிய சர்க்கரை போல் இனிப்பவனும், என் உள்ளத்தில் சுரந்து மகிழ்விக்கும் தேன் போன்றவனும், எத்துணை யுண்டாலும் உண்ணத் தெவிட்டாமல் மனத்துள் ஊறுகின்ற இன்ப அமுதாகியவனும், வளம் பொருந்திய பெரிய வாழ்வைத் தருபவனும், என் கண்ணுள் விளங்கும் மணி போல்பவனும், என் வாழ்விற்கு வேண்டும் செல்வமாகியவனும், என் நெற்றியில் இலாடத்தில் ஒளிர்கின்ற ஒளியாயவனும், அவ்வொளிக்குள் விளங்கும் குருபரனுமாகிய சிவபெருமானைக் கண்டு கொண்டேன். எ.று.
களம் - இடம். உலகியற் பிறப்புக்களில் மக்கட் பிறப்பில் இடம் பெற்று இருப்பது தோன்ற, “களங் கொளுங் கடையேன்” எனவும், தமக்குக் கடைமை இயல்பு எய்துதற் கேதுவாகிய குற்றங்களைப் போக்கி இன்பம் தந்து மகிழ்வித்தமை விளக்குதற்கு, “களங்கெலாம் தவிர்த்து களிப்பெலாம் அளிந்த சர்க்கரை” எனவும் துதிக்கின்றார். வாயால் உண்ணுவதின்றி மன வுணர்வால் நுகரப்படுவது பற்றி, “உளங்கொளுந்தேன்” என்று உரைக்கின்றார். உலகியல் தேன் போலாது ஞானத்தால் சிந்தையின்கண் ஊறி மகிழ்விப்பது பற்றி, “உணவுணத் தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன்னமுது” எனவும், யாதானும் குறைவின்றி நிறைந்த வளம் மிக்க சிவபோகப் பெருவாழ்வை நல்குபவனாதலால், “வளங் கொளும் பெரிய வாழ்வு” எனவும், வறுமை பிணி முதலிய குறைபாடில்லாத வாழ்க்கையை நல்குவது தோன்ற, “என் வாழ்க்கை மாநிதி” எனவும் இயம்புகின்றார். குளம், நெற்றி, நெற்றியில் புருவ நடுவாகிய இலாடத்தானத்தே ஒளியாய்க் காணப்படுவது பற்றி, “குளம் கொளும் ஒளி” என்றும், அவ்வொளிக்குள் ஒளிரும் ஞானப் பொருளாதல் பற்றி, “ஒளிக்குளே விளங்கும் குரு” என்றும் ஓதுகின்றார்.
இதனால், உணர்வார் உணர்வின்கண் உண்ண வுண்ணத் தெவிட்டாது அமுதமாய் ஊறியும், இலாடத்தானத்தே ஒளிக்குள் ஒளியாய் விளங்கியும் சிறக்கும் சிவத்தின் பெருமை ரிவித்தவாறாம். (15)
|