3969.

     சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
          சிதம்பர நடம்புரி சிவத்தைப்
     பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
          பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
     இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
          யாவுமாய் அல்லவாம் பொருளைச்
     சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
          சாமியைக் கண்டுகொண் டேனே.

உரை:

     சிதாகாசத்தில் விளங்குகின்ற சிவ வொளியும், சிதாகாசப் பரவெளியாய்த் திகழ்வதும், சிதம்பரத்தில் திருக்கூத்தாடுகின்ற சிவ பரம்பொருளுமாகிய உயிர்கட்குச் சிவ பதத்தை நல்கும் சிவ பதப் பொருளும், மேன் மேலாக உயர்ந்துள்ள உயர்நிலைப் பொருளும், பதிப்பொருளாகிய சிவமும், தனக்குத் தானேயாகிய தனிப் பதப் பொருளும், நன்மை பயக்கும் உண்மையாகிய பெரிய தனிநிலைப் பொருளும், எல்லாமாய் அல்லதுமாய் இருக்கும் மெய்ப் பொருளும், நித்தத்துவத்தைத் தருகின்ற சச்சிதானந்த நிறைவாகிய நிறை பொருளும், எல்லாவற்றிற்கும் சாமியுமாகிய சிவ பரம்பொருளைக் கண்டு கொண்டேன். எ.று.

     சிதம்பரம் என்பது சித்து அம்பரம் எனப் பிரிந்து ஞானாகாசத்தைக் குறிக்கின்றமையின் அங்கு ஒளிர்கின்ற பரவொளியாகிய சிவத்தை, “சிதம்பர வொளி” என்றும், ஞானாகாசம் பரவெளியே தனக்கு உருவாய் விளங்குதலின் சிவத்தை, “சிதம்பர வெளி” என்றும், தில்லைச் சிதம்பரத்தில் உள்ள அம்பலத்தில் ஆடல் புரிகின்ற கூத்தப் பெருமானை, “சிதம்பர நடம் புரி சிவம்” என்றும் தெரிவிக்கின்றார். ஆன்மாக்கள் தாம் செய்யும் நல்வினைப் பயனால் மேன்மேல் சென்று பெறுகின்ற சிவபதத்தை, “பதந்தரு பதம்” எனவும், அது தனக்குக் கீழ் உள்ள இந்திர பதம், பிரம்ம பதம் முதலிய பதங்களை நல்குவது விளங்க, “பதந்தரு பதம்” எனவும், எல்லாப் பதங்கட்கும் மேலாக வுள்ள சிவ பதத்தைத் தான் உறையும் பதமாகக் கொள்வது பற்றி, “பரம்பர பதம்” எனவும், அப்பதத்தின்கண் சிவமாகிய தானே பதியாய், நிலை பெறுவது குறித்து, “பதி சிவ பதம்” எனவும், அப்பதம் தானும் பிறிதொன்றால் படைக்கப்படாது தானே தனிப் பதமாய் இருத்தல் பற்றி, “தற்பதம்” எனவும் உரைக்கின்றார். எல்லா வுயிர்க்கும் இன்பம் தரும் உண்மைப் பொருளாகிய சிவத்திற்கு உரித்தாய பெரிய இன்ப நிலையாதலின் சிவத்தின் தனி நிலையை, “இதந் தரும் உண்மைப் பெருந் தனி நிலை” எனக் கூறுகின்றார். அந்தச் சிவபரம் பொருள் எல்லா உலகங்களிலும் உள்ள பொருள்களாகவும் அல்லாத வேறாகவும் விளங்கக் கண்ட சான்றோர், யாவுமாய் அல்லவும் பொருள் எனப் போற்றி யுரைத்தலால், “யாவுமாய் அல்லவாம் பொருள்” எனவும், சத்தாகிய தன்மையுடைய சிவ பரம்பொருளின் உண்மைத் தன்மையை யோக கண் சத்தாம் ஞானக் காட்சிகளால் யாதாம் எனக் கண்டுணர்ந்த சான்றோர் அதன் தன்மையும், சித்தாந் தன்மையும், இன்பமாந் தன்மையும் குறைவற நிறைந்திருப்பது கண்டு சச்சிதானந்தம் சிவம் என்று விளக்குதலால், “சதந் தரும் சச்சிதானந்த நிறைவு” எனவும், அருவுருவில் அந்நிறைவு சிவம் என்னும் சாமியாக ஞானிகள் உரைத்தலால், “சாமி” எனவும் போற்றப்படுகின்றது. சாமி - தலைவன். “தான் ஏறனையான் சீவக சாமி என்பான்” (சீவக) என்று திருத்தக்க தேவர் வழங்குவது காண்க.

     இதனால், சிதம்பரப் பொருளும், சிவ பதப் பொருளும், சச்சிதானந்த நிறைவுமாவது பரசிவ மென்பது விளக்கியவாறாம்.

     (16)