3970.

     ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
          ஆகம முடிஅமர் பரத்தைக்
     காரண வரத்தைக் காரிய தரத்தைக்
          காரிய காரணக் கருவைத்
     தாரண நிலையைத் தத்துவ பதியைச்
          சத்திய நித்திய தலத்தைப்
     பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
          பொருளினைக் கண்டுகொண் டேனே.

உரை:

     வேதங்களின் முடி மேல் வைத்துப் பேசப்படும் பிரம்மமாகிய பொருளும், ஆகமங்களின் முடிபாக ஓதப்படும் பரசிவப் பொருளும், எல்லாப் பொருட்கும் காரணப் பொருளாய் மேம்படும் பொருளும், காரியப் பாட்டால் பகுக்கப்படும் பொருளும், காரிய காரணங்களுக்கு முதற் கருவாய் நிற்கும் கருப் பொருளும், எல்லாவற்றையும் தாங்குவதாகிய நிலைத்த பொருளும், தத்துவங்கட் கெல்லாம் தலைமைப் பொருளும், உண்மையும், நித்தியத்துவமும் கொண்ட சிவ தலமும், நிறைந்த சுக வடிவும், எல்லாம் குறைவற நிறைந்த சிவமுமாம் பரம்பொருளைக் கண்டு கொண்டேன். எ.று.

     வைதிக நூல்கள் பலவும் பரம்பொருளைப் பிரம்மம் என்றும், சிவாகமங்கள் யாவும் பரம்பொருளைப் பரசிவ மென்றும் கூறுவதால், “ஆரண முடிமேல் அமர் பிரமத்தை ஆகம முடி அமர் பரத்தை” என்று அறிவிக்கின்றார். தருக்க நூலாரும் விஞ்ஞானிகளும் பொருள்களைக் காரண காரிய முறையில் ஆராய்ந்து உண்மை காண்பவராதலால், மேலாய காரணப் பொருளாயும் காரியப் பொருளாயும், காரண காரியங்களுக்கு முதற் பொருளாயும் விளங்குவது பற்றி அவர்கள் நெறியில் நின்று, “காரண வரத்தைக் காரிய தரத்தைக் காரிய காரணக் கருவை” எனக் கட்டுரைக்கின்றார். எண்ணிறந்த அண்டங்களையும், அவற்றின்கண் நிறைந்துள்ள உலகங்களையும், அவ்வவ் வுலகப் பொருட்களையும் நிலை நின்று தாங்குதல் பற்றிச் சிவத்தை, “தாரண நிலை” எனவும், ஆன்ம தத்துவம் முதலாகச் சிவ தத்துவம் ஈறாக வுள்ள தத்துவந்தோறும் நிற்கும் தேவர்களுக் கெல்லாம் தலைவனாதல் பற்றிச் சிவனை, “தத்துவப் பதி” எனவும், சிவம் எழுந்தருளும் பேரிடம் உண்மையும் நித்தமும் உடையது என்றற்கு அதனை, “சத்திய நித்திய தலம்” எனவும் சாற்றுகின்றார். சிவம் பெற்ற ஆன்மாக்கள் குறையே இல்லாத நிறைந்த சுகத்தைப் பெற நல்கும் பெருநலத்தின் உருவாக உள்ளமை பற்றி, “பூரண சுகம்” என்றும், “பூரண சிவமாம் பொருள்” என்றும் புகன்றுரைக்கின்றார்.

     இதனால், வேதங்களும், ஆகமங்களும், தருக்க வாத நூல்களும், தத்துவ நூல்களும் பரம்பொருளை யுரைக்கும் திறன்களை எடுத்துக் காட்டியவாறாம்.

     (17)