3971. சுத்தவே தாந்த பிரமரா சியத்தைச்
சுத்தசித் தாந்தரா சியத்தைத்
தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
சமரச சத்தியப் பொருளைச்
சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
தெளிந்தபே ரானந்தத் தெளிவை
வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
மெய்மையைக் கண்டுகொண் டேனே.
உரை: தூய வேதாந்த நூல்கள் உரைக்கும் பிரமம் விளங்கும் பெருநிலையும், தூய சித்தாந்த நூல்கள் உரைக்கும் சிவ பதப் பொருளும், தத்துவங்கட் கெல்லாம் மேலாய் விளங்கும் ஒப்பற்ற தத்துவாதீதப் பொருளும், பொருள்கள் அனைத்தையும் ஒப்ப நோக்கும் உயர் பொருளும், சித்துக்கள் எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்துப் பொருளும், என்னுடைய அறிவின்கண் தெளிந்த பேரின்பத் தெளிவாகிய பொருளும், சிவஞானப் பெருவெளியுமாய் விளங்குகின்ற தூய ஞான சபையின்கண் யாவரும் காண விளங்கும் மெய்ப்பொருளாகிய சிவத்தைக் கண்டு கொண்டேன். எ.று.
பிரமனுக்குத் தாமரை இடமாதல் போலப் பிரமப் பொருள் இருந்து திகழும் இடத்தை, “பிரம ராசியம்” எனவும், சித்தாந்த முடி பொருளாகிய சிவம் இருந்து திகழும் பரநிலையை, “சித்தாந்த ராசியம்” எனவும் செப்புகின்றார். ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என மூவகைப்பட்டு முப்பத்தாறாக விரியும் தத்துவங்கட்கெல்லாம் மேலாய்த் தத்துவாதீதமாய் ஒப்பற்ற பெரும் பொருளாய் விளங்குவது பற்றி, “தத்துவாதீதத் தனிப் பெரும் பொருள்” என்றும், எண்ணிறந்த வகையினவாயினும் அவை யெல்லாவற்றுள்ளும் பொருண்மை என்ற வகையில் ஒப்ப நின்று நிலை பெறுவது பற்றிப் பரம்பொருளை, “சமரச சத்தியப் பொருள்” என்றும் உரைக்கின்றார். நுண்ணறிவால் கண்டறிந்து செய்யப்படும் செயல்கள் எல்லாவற்றினும் கலந்து அறிவுருவாய் விளங்குதல் பற்றி, “சித்தெலாம் வல்ல சித்து” எனவும், நுண்ணறிவால் நுணுகி ஆராயுமிடத்து அறிவுக்குத் தூய இன்பம் தருவது பற்றி, “அறிவில் தெளிந்த பேரானந்தத் தெளிவு” எனவும், பரஞானத்திற்குப் பொருளாகும் பரவெளியை, “வித்த மாவெளி” எனவும், தூய சிவஞானப் பேரவையை, “சுத்த சிற்சபை” எனவும், அதன்கண் மெய் பெற நின்று ஆடல் புரிதலால், “சிற்சபையின் மெய்ம்மை” எனவும் இயம்புகின்றார்.
இதனால், வேதாந்த சித்தாந்த தத்துவாதீதப் பரம்பொருளின் அறிவானந்த சிற்சபையில் விளங்கும் மெய்ப்பொருளாம் தன்மையை விளக்கியவாறாம். (18)
|