3972.

     சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
          சபைநடம் புரிகின்ற தனியைத்
     தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
          சத்துவ நித்தசற் குருவை
     அமையஎன் மனத்தைத் திருத்திநல் அருளார்
          அமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
     நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
          நீதியைக் கண்டுகொண் டேனே.

உரை:

     சமயங்கள் கொள்கைகள் ஆகியவற்றின் எல்லையைக் கடந்த ஒப்பற்ற ஞான சபையில் நடம் புரிகின்ற தனிப் பொருளும், தம்மை யறிந்த ஞானிகளின் உள்ளத்தில் இடங் கொண்ட அவர்களுக்கு மெய்ம்மையான சார்பாகிய பரம்பொருளும், சத்துவ குண வடிவாய் நித்தமாய் உள்ள சற்குருவும், என் மனத்தை நன்னெறியில் அமையுமாறு திருத்தி நல்ல திருவருளாகிய அமுதத்தை யளித்தருளி என்னுள் அமர்ந்திருக்கின்ற அற்புதப் பொருளும், நிமலனும், நிர்க்குணத்தனும், ஞான குணமே உருவாகக் கொண்ட நீதிமானுமாகிய சிவபெருமானைக் கண்டு கொண்டேன். எ.று.

     சமயங்களும், சமயக் கொள்கைகளும் தம்மை மேற்கொண்டவர்களைத் தம்முடைய எல்லைக் குள்ளே அடக்கிச் சமரச ஞானத்தை விளைவியாது தடுத்தலின் பரம்பொருள் ஞானம் அவற்றைக் கடந்து விளங்குவது பற்றி, “சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபை” எனவும், சமய மதாதீத நிலையில் நின்று ஞான நடம் புரிகின்ற பெருமானாதல் பற்றி, “ஞான சபை நடம் புரிகின்ற தனி” எனவும் எடுத்துரைக்கின்றார். தம்மை அறிந்தவர் அதுவே வாயிலாகத் தம்மை யுடைய தலைவனாகிய பெருமானை அறிந்து அவரையே நிலைத்த சார்பாக அடைதலால், “தமையறிந்தவர் உட்சார்ந்த மெய்ச் சார்பு” என்றும், அந்த மெய்ந்நெறியைச் சத்துவ நித்த சற்குருவாய்ச் சிவன் உபதேசிக்கும் திறத்தைப் புலப்படுத்தற்கு, “சத்துவ நித்த சற்குரு” என்றும் உரைக்கின்றார். ஞான வுணர்வுக்கும் ஒழுக்கத்திற்கும் சத்துவ குணம் நிலைபெற அமைவது இன்றியமையாமையின், “சத்துவ நித்தம்” எனச் சற்குருவைச் சிறப்பிக்கின்றார். தூய்மையே வடிவாக அமைந்த தாம் எழுந்தருளும் உள்ளங்களும் தூயவாதல் வேண்டி அவற்றை முதற்கண் திருத்தித் தூய்மை செய்வது இறைவன் அருட் பண்பாதலின், “என் மனம் அமையத் திருத்தி நல்லருளார் அமுதளித்து அமர்ந்த அற்புதம்” எனக் கூறுகின்றார். “திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை யிடங்கொள் கயிலாயா” (பொது) என்று சுந்தரரும் உரைப்பது காண்க. நிமலன் - மலமில்லாதவன். நிர்க்குணம், மாயா காரியமாகிய குணங்கள் இல்லாதவனாதலால் “நிற்குணம்” என்றும், ஞானமே குணமும் உருவும் கொண்டவனாதலின், “சிற்குணாகாரம்” என்றும், நீதியே உருவாதல் பற்றி, “நீதி” என்றும் சிவ பரம்பொருளை எடுத்துரைக்கின்றார்.

     இதனால், சமயாதீத ஞான சபைத் தலைவனாய், சார்ந்தவர்க்கு மெய்ம்மையான சார்பாய் மனத்தைத் திருத்தி அருளமுதம் அளிக்கும் அற்புதப் பொருளாகும் தன்மையை விளக்கியவாறாம்.

     (19)