3973.

     அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
          அருட்பெருஞ் சோதியை உலகக்
     களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
          காட்சியைக் கருணையங் கடலை
     உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
          ஒளியையும் உதவிய ஒளியைக்
     குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
          கோயிலில் கண்டுகொண் டேனே.

உரை:

     பிரமாண வகைகள் எல்லாவற்றையும் கடந்து அப்பால் நின்று விளங்கும் அருட் சோதியாகிய இறைவனும், உலகியல் வாழ்வு பயக்கும் களவு முதலிய குற்றங்களை நீக்கின பெரியோர்களின் மனத்தின்கண் தோன்றித் திகழும் காட்சிப் பொருளும், கருணைக் கடலும், உண்மை ஞானத்தைப் பெறுதற்குரிய உபாய நெறியை எனக்கு அறிவுறுத்தி எல்லாவற்றையும் அறிய வல்ல ஞான வொளியை எனக்கு உதவிய சிவ வொளிப் பொருளும், நெற்றியில் உள்ள இலாடத்தின்கண் நிறைந்து விளங்கும் சிவ குருவுமாகிய பெருமானைத் திருக்கோயிலில் கண்டு இன்புற்றேன். எ.று.

     காட்சி, கருத்து, உரை முதலாக வுள்ள பிரமாணங்கள் அனைத்துக்கும் எட்டாமல் அவற்றை எல்லாம் கடந்து நின்று திகழும் சிறப்புடைமை பற்றி, “அளவைகள் அனைத்தும் கடந்து நின்றோங்கும் அருட் சோதி” எனவும், உலகியல் வாழ்வில் வாழ்வார்க்கு வந்தடையும் களவு, வஞ்சனை, பொய் முதலிய குற்றங்களைத் தம்மிடத்தே இல்லாதபடி போக்கிக் கொண்ட நல்லவர்களின் கருத்தின்கண் விளங்கத் தோன்றும் ஞானப் பொருளாதலின் இறைவனை, “உலகக் களவை விட்டவர்தம் கருத்துளே விளங்கும் காட்சி” எனவும் ஓதுகின்றார். மெய்ம்மை ஞானத்தைப் பெறுதற்குரிய உபாயங்களை ஆசிரியனாய் எழுந்தருளி உரைத்தருளி ஞான ஒளியைத் தந்தருளிய அருள் நலத்தை, “உளவை என்றனக்கே உரைத்து எல்லாம் வல்ல ஒளியையும் உதவிய ஒளி” என்றும், யோகக் காட்சியில் புலனாகும் சிவஞான குருபரனாதல் பற்றி, “குளவையின் நிறைந்த குரு சிவபதி” என்றும், அப்பெருமான் கோயிலில் எழுந்தருளக் கண்டு வழிபட்ட திறம் தெரிவிப்பாராய், “கோயிலில் கண்டு கொண்டேனே” என்றும் கூறுகின்றார்.

     இதனால், சிவயோகத்தால் இலாடத்தே விளங்கக் கண்ட சிவபதியாகிய பரம்பொருளைத் திருக்கோயிலில் கண்டு மகிழ்ந்தமை தெரிவித்தவாறாம்.

     (20)