3974.

     சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
          சமரச சத்திய வெளியைச்
     சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
          துலங்கிய ஜோதியைச் சோதிப்
     பார்பெறாப் பதத்தைப் பதம்எலாங் கடந்த
          பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
     சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
          தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.

உரை:

     அறிவு நெறியைச் சார்ந்த கலாந்த முதலாக வுள்ள அந்தங்கள் ஆறினும் ஓரொப்பக் கலந்து விளங்கும் சமரச சத்திய ஞான வெளியும், எனக்கு அவ்வப்போது உளதாகிய மனச் சோர்வை நீக்கி என் அறிவுக் கறிவாய் விளங்கிய சோதிப் பொருளும், ஒளி உலகத்தாலும் பெறலாகாத உயர் பதங்கள் எல்லாவற்றையும் கடந்த மேலான சன்மார்க்க நெறிக்குரிய மெய்ம்மைத் தலைவனும், உயிர்களைச் சேர்ந்துள்ள குண தத்துவத்தின் அந்தத்தில் சிறந்து விளங்கும் தலைமைத் தெய்வமுமாகிய சிவபெருமானைக் கண்டு மகிழ்ந்தேன். எ.று.

     கலாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என ஆறு வகைப்படுதலின், “கலாந்தாதிச் சடலம்” என்றும், இவை ஆறும் பொருட்களின் உண்மைத் தன்மையை யுணர்தற்கு உதவுவனவாதலின் இவற்றை, “சார் கலாந்தாதிச் சடலம்” என்று சிறப்பித்து இவற்றுள் வேற்றுமை நோக்காது ஓரொப்பச் சமநிலையில் கலந்து விளங்குவது பற்றி, “சடாந்தமும் கலந்த சமரச சத்திய வெளி” என்றும் எடுத்தோதுகின்றார். உடலோடு கூடி உலகில் வாழும் உயிர்க்குச் சோர்வும், தளர்ச்சியும், மறதியும் இயல்பாதலின், அவை அறிவாராய்ச்சிக்குத் தடையாதலின் அவற்றைப் போக்கி அறிவுக் கறிவாய் அருளொளி நல்கி ஊக்குவது பற்றிச் சிவத்தை, “சோர்வெலாம் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த் துலங்கிய சோதி” எனவும், விண்ணுக்கு மேலுள்ள உலகங்கள் “சோதி உலகங்கள்” எனவும், அங்கு வாழும் தேவர்களும் பெற முடியாத சிவ பதத்தையுடையனாதல் பற்றிச் சிவனை, “சோதிப் பார் பெறாப் பதம்” எனவும், அதன் மேலுள்ள பிரமபதம் முதலாகிய பதங்கள் எல்லாவற்றிற்கும் மேலதாதலால் சிவ பதத்தை, “பதமெலாம் கடந்த மெய்ப் பதி” எனவும், அது சன்மார்க்க நெறியின் மெய்ம்மையான முடிவிடம் என்பாராய், “பரம சன்மார்க்க மெய்ப் பதி” எனவும் பாராட்டப்படுகின்றது. குணாந்தம் - தெய்வங்கள் பலவும் குணங்கள் பலவற்றை யுடையவையாதலால் தெய்வாதீதமா யுள்ள சிவ பரம்பொருளை, “குணாந்தத்திற் சிறந்ததோர் தலைமைத் தெய்வம்” என்று குறிக்கின்றார்.

     இதனால், சமரச சத்திய வெளியாய், சன்மார்க்க மெய்ப் பதியாய், அறிவுக் கறிவாய் விளங்கும் தலைமைத் தெய்வமாகிய சிவத்தைக் கண்டு கொண்டமை தெரிவித்தவாறாம்.

     (21)