3975. அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்
அறிந்திடப் படாதமெய் அறிவைப்
படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த
பதியிலே விளங்குமெய்ப் பதியைக்
கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்
கடைக்கணித் தருளிய கருணைக்
கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
உரை: அடியென்றும் நடுவென்றும் முடியென்றும் ஓர் அணுவளவும் அறிதற்காகாத ஆனால் மெய்யறிவால் அறியப் படுவதாகிய மெய்ப் பொருளும், நிலம் முதல் அளவிறந்த அண்டங்கள் நிறைந்த அண்டப் பரப்புக்கள் எல்லாவற்றையும் கடந்து அப்பால் விளங்குகின்ற மெய்ம்மையான தலைவனும், கடிது என விலக்கத் தக்க என் மனமாகிய கல்லையும் கனி போல் மென்மை யுறுமாறு அருள் நோக்கம் செய்தருளிய கருணைக் கொடியாகிய உமாதேவியை இடப் பாகத்தே கொண்ட பெரிய தயாநிதியுமாகிய சிவனைத் திருக்கோயிலில் கண்டு மகிழ்ந்தேன். எ.று.
பரம்பொருள் உலகியல் அறிவாலும் நூலறிவாலும் இஃது ஆதி, இஃது நடுவிடம், இஃது அந்தம் என்று ஓர் அணுவளவும் அறிய முடியாத பொருளாயினும், மெய்யறிவு கொண்டு நோக்குவார்க்குத் தெளிய விளங்குதலின், “அடி நடு முடி ஓர் அணுத் துணையேனும் அறிந்திடப்படாத மெய்யறிவு” என்று இயம்புகின்றார். மணிவாசகரும், “ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் சோதி” (எம்பாவை) என்று கூறுவது காண்க. நிலம் முதலாக அண்டங்கள் எண்ணிறந்தனவாதலின் அவை எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி யிருக்கின்ற பெருவெளி “அண்டப் பரப்பு” எனப்படுகிறது. அப்பரப்புக்கு அப்பால் நின்றாடுகின்ற பெருமானாதலால், “அண்டப் பரப்பெலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய்ப்பதி” என்று குறிக்கின்றார். “அண்டத் தண்டத்தின் அப்புறத்தாடும் அமுதன்” என்று பெரியோர் புகழ்ந்துரைப்பது காண்க. கடிதல் - விலக்குதல். கல்லையும் கனியாக்கும் அருட் டிறம் இறைவனுக்கே உரியதாகலின் அதனை, “கடிய என் மனனாங் கல்லையும் கனியிற் கடைக் கணித்தருளிய பெரிய தயாநிதி” எனப் பராவுகின்றார். அருட் சத்தியின் திருவுருவாதலால் உமாதேவியை, “கருணைக் கொடி” என்று புகழ்கின்றார்.
இதனால், உமாதேவியோடு கூடிய சிவபெருமானைத் திருக்கோயிலில் கண்டு மகிழ்ந்த திறம் உரைத்தவாறாம். (22)
|