3976. பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்
பற்றறத் தவிர்த்தருட் பரிசும்
நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு
நல்கிய நண்பைநன் னாத
இயமுற வெனது குளநடு நடஞ்செய்
எந்தையை என்னுயிர்க் குயிரைப்
புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
பொற்புறக் கண்டுகொண் டேனே.
உரை: அச்சமும் பெருங் கவலையும் இடர்களும் முதலாக வுள்ள துன்பங்கள் அனைத்தையும் பற்றற நீக்கி யருளும் தன்மையும், நயமும் நல்ல செல்வமும் உருவும் இங்கே எனக்குத் தந்தருளிய நட்பையும், இனிய ஓசை யுண்டாக எனது புருவ நடுவில் நின்று கூத்தாடுகின்ற என் தந்தையும், என் உயிர்க் குயிரானவனும், நீர் மண்டலத்தின் இடையில் நின்று நிலவும் புண்ணிய ஒளியுமாகிய சிவனை அழகுறக் கண்டு கொண்டேன். எ.று.
அச்சம் - மிக்க மனக் கவலை. பிற துன்பங்கள் ஆகிய அனைத்தும் தமக்கு உண்டாகாதபடி விலக்கி அருட் பண்பும், நீதி யுணர்வும், நல்லது புரியும் செல்வமும், அழகிய மேனியும் தமக்கு இறைவன் தந்தருளிய சிறப்பை, “பயமும் வன்கவலை இடர் முதல் அனைத்தும் பற்றறத் தவிர்த்து அருட் பரிசும் நயமும் நற்றிருவும் உருவும் ஈங்கு எனக்கு நல்கிய நண்பு” என்று இறைவனைக் குறிக்கின்றார். புருவ நடு இங்கே குளநடு எனப்படுகிறது. குளம் - நெற்றி. அஃது இங்கே நெற்றியின் பகுதியாகிய புருவ நடுவைக் குறிக்கின்றது. நன்னாத இயம் - நல்ல நாதத்தைச் செய்யும் இசைக் கருவியின் ஓசை மேற்று. புருவ நடுவில் இறைவன் நடம் புரிவதைக் காணுமிடத்து இனிய இசைக் கருவி யோசை கேட்கப்படுகிறது என யோகியர் கூறுவது பற்றி, “நன்னாத இயமுற எனது குளநடு நடஞ் செய் எந்தை” என்று நவில்கின்றார். நீர் மண்டலத்தின்கண் இயல்பாக விளங்கும் தூய ஒளியைப் புண்ணிய ஒளி எனவும், அது சிவத்தின் கூறு எனவும் குறிப்பாராய், “புயல் நடு விளங்கும் புண்ணிய வொளி” என்று புகல்கின்றார்.
இதனால், புருவ நடுவின்கண் யோகக் காட்சிகளில் தோன்றும் இறைவனது திருநடனம் நல்ல மங்கல ஓசையுடன் நிலவும் வகை எடுத்துரைக்கப்பட்டவாறாம். (23)
|