3977. கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
ககனத்தைக் காற்றினை அமுதை
நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
நின்மல நிற்குண நிறைவை
மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
வரவுபோக் கற்றசின் மயத்தை
அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
அன்பினிற் கண்டுகொண் டேனே.
உரை: கலை நிறைந்த முழு மதியாகவும், தீயாகவும், சிவந்த ஒளிக் கதிர்களையுடைய சூரியனாகவும், வானமாகவும், அமுதமாகவும், காற்றாகவும், நின்ற நிலையில் எங்கும் நிறைந்திருக்கும் திருவடியாகவும், அடி முடி காண மாட்டாத நின்மல நிற்குண நிறை பொருளாகிய சிவ பரம்பொருளும், மயக்கமில்லாத பெரியோர் உள்ளத்தின்கண் எழுந்தருளுகின்ற மெய் வாழ்வாகவும், போக்கு வரவு இல்லாத ஞான மயமாகவும், அலை யில்லாத ஒப்பற்ற பெரிய கருணைக் கடலாகவும் விளங்குகின்ற பெருமானுமாகிய பரமசிவனை அன்பு நிறைந்த என் உள்ளத்தோடு கண்டு மகிழ்ந்தேன். எ.று.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய எட்டும் தனக்குருவாகக் கொண்டவனாதலால் சிவனை, “கலை நிறை மதி கனல் செங்கதிர் ககனம் காற்று” என்று கூறுகின்றார். சிந்திப்பார்க்குச் சிந்தையின்கண் அமுதம் சுரந்து இன்பம் செய்தலால், “அமுது” என்று போற்றுகின்றார். எங்கும் எல்லாப் பொருளிலும் இறைவன் திருவடி நிறைந்து நிற்கிறபடியால் அதனை யுடைய சிவபெருமானை, “நிலை நிறை அடி” என்று புகழ்கின்றார். அப்பெருமானுடைய அடியையும் முடியையும் யாவராலும் காண முடியா தென்பதோடு அப்பெருமானும் நின்மலனாகவும், நிற்குணனாகவும், நிறை பொருளாகவும் விளங்குவது புலப்பட, “அடி முடி தோற்றா நின்மல நிற்குண நிறைவு” என்று பாராட்டுகின்றார். மலைவு - ஐய விபரீதங்கட்கு ஏதுவாகும் மயக்கம். மலைவில்லாத சான்றோர்களின் உள்ளத்தின்கண் நிலைபெற நின்று விளங்குவது பற்றி இறைவனை, “மலைவறும் உளத்தே வயங்கு மெய் வாழ்வு” என விளம்புகின்றார். பிறப்பிறப் பில்லாத ஞானிப் பரம்பொருளாதல் பற்றி, “வரவு போக்கற்ற சின்மயம்” என்று செப்புகின்றார். உலகியற் கடல் போலக் காற்றால் அலைக்கப் படுவதில்லாத தனிப் பெருங்கருணைக் கடலாதல் விளங்க, “அலையறு கருணைத் தனிப் பெருங் கடல்” எனக் கூறுகின்றார்.
இதனால் இறைவனது அட்ட மூர்த்தம் காட்டப்பட்டவாறாம். (24)
|