3978. மும்மையை எல்லாம் உடையபேர் அரசை
முழுதொருங் குணர்த்திய உணர்வை
வெம்மையைத் தவிர்த் திங் கெனக்கருள் அமுதம்
வியப்புற அளித்தமெய் விளைவைச்
செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
அம்மையைக் கருணை அப்பனை என்பேர்
அன்பனைக் கண்டுகொண் டேனே.
உரை: இம்மையும், மறுமையும், அம்மையும் என்ற மும்மையும் தன் வடிவாக யுடையவனும், எல்லாவற்றையும் தனக்கு உடைமையாகக் கொண்ட பேரரசனும், எல்லாவற்றையும் எஞ்சாமல் பிறர்க்கு உணர்த்தும் முற்றுணர்வாகியவனும், பிறவி வெப்பத்தைப் போக்கி இம்மையிலே எனக்கு வேண்டிய திருவருள் ஞான வமுதத்தை யானே வியக்கும் வண்ணம் நல்கும் மெய்ஞ்ஞான விளைவாகியவனும், செம்மை யுருவாகியவனும், எல்லாச் சித்திகளும் எனக்கு உண்டாகுமாறு அருளினவனும், எனக்கு அம்மையும், கருணை நிறைந்த அப்பனும், பேரன்பனுமாகிய சிவபெருமானைக் கண்டு கொண்டேன். எ.று.
இம்மை வாழ்வு, மறுமை வாழ்வு, முத்தி வாழ்வு ஆகிய மூன்றும் இறைவன் மயமாதல் பற்றி அவனை, “மும்மை” என்று கூறுகின்றார். பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரையும் தன் கூறாக உடையவனாதல் பற்றி இவ்வாறு கூறினார் எனினும் அமையும். “செழும் பொழில்கள் பயந்து காத்தளிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி” (சதகம்) என்று மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. தன் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுதையும் தன்னுடையதாகக் கொண்ட அரசனைப் போல உலகங்கள் எல்லாவற்றையும் தனக்கு உடைமையாகக் கொண்டவன் என்பது பற்றிச் சிவனை, “பேரரசு” என்று உரைக்கின்றார். முற்றுணர்வுடைய முதல்வனாதலால் அவன் தன்னை யடைந்தார்க்கு யாவற்றையும் குறைவற ஒருங்குணர்த்தும் ஞானப் பொருளாதல் பற்றி, “முழுது ஒருங்குணர்த்திய உணர்வு” என்று மொழிகின்றார். பிறப்பிறப்புக்களால் ஆன்மாவிற்கு உண்டாகும் வெப்பத்தைப் போக்கிக் குளிர்ந்த திருவருளாகிய அமுதத்தை அவரது மெய்யன்பின் விளைவாக நல்குதல் தோன்ற, “வெம்மையைத் தவிர்த்திங்கு எனக்கு அருள் அமுதம் வியப்புற அளித்த மெய் விளைவு” என விளம்புகின்றார். அவனைச் செம்பொருளென உயர்ந்தோர் அனைவரும் உரைப்பதால், “செம்மை” என்று சிறப்பிக்கின்றார். எண்வகைச் சித்திகளையும் செய்ய வல்ல பேராற்றலை இறைவன் தமக்கு அருளி யுள்ளான் என்பாராய், “எல்லாச் சித்தியும் என்பால் சேர்ந்திடப் புரியருள் திறம்” என அறிவிக்கின்றார். உலகுயிர்கட்கு இறைவனை அம்மை யப்பன் என்பது பற்றி, “அம்மையைக் கருணை அப்பனை என் பேரன்பனைக் கண்டு கொண்டேன்” என வுரைக்கின்றார்.
இதனால், மும்மையாகவும், செம்மையாகவும், அம்மையப்பனாகவும் சிவ பெருமான் விளங்கும் திறம் தெரிவித்தவாறாம். (25)
|