3979.

     கருத்தனை எனது கண்அனை யவனைக்
          கருணையார் அமுதெனக் களித்த
     ஒருத்தனை என்னை உடையநா யகனை
          உண்மைவே தாகம முடியின்
     அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்
          றம்பலத் தருள்நடம் புரியும்
     நிருத்தனை எனது நேயனை ஞான
          நிலையனைக் கண்டுகொண் டேனே.

உரை:

     எனக்குத் தலைவனும், என்னுடைய கண் போன்றவனும், திருவருளாகிய ஞான வமுதத்தை எனக்கு அளித்த ஒப்பற்றவனும், என்னை அடிமையாக யுடைய நாயகனும், வேதாகமங்களின் முடிபாகிய உண்மையான பொருளாகியவனும், வரம் தருபவனும், அபயமளிப்பவனும், திருச்சிற்றம்பலத்தின்கண் அருள் நடம் புரியும் கூத்தப் பெருமானும், எனக்கு நேயனும், சிவஞான நிலையை யுடையவனுமாகிய சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன். எ.று.

     கருத்தன் - தலைவன்; கருத்தின்கண் இருப்பவன் என்று கூறினும் பொருந்தும். அவனது கருணையாகிய திருவருள் ஞான வமுதமாக அமைந்ததாதலின் அதனை, “கருணை ஆரமுது” எனவும், அதனையளிக்க வல்லவர் வேறு எவரும் இல்லாமை தோன்ற, “அமுது எனக் களித்த ஒருத்தன்” எனவும் உரைக்கின்றார். தமக்கும் இறைவனுக்கும் தொடர்பு கூறுவாராய், “என்னை யுடைய நாயகன்” என்று இயம்புகின்றார். வேதம், ஆகமம் என்ற இவற்றின் முடிபு சிவத்தின் பரம்பொருளாம் தன்மையை எடுத்தோதுவதாகலின் அதனை விளக்குதற்கு, “வேதாகம முடியின் உண்மை யருத்தன்” எனத் தெரிவிக்கின்றார். அருத்தம் - பொருள். பொருளாக இருப்பவனாதல் தோன்ற, “அருத்தன்” என அறிவிக்கின்றார். நிருத்தன் - கூத்தப் பெருமான். நேயன் - நண்பன். ஞான நிலையன் - ஞானப் பொருளாகியவன் எனினும் பொருந்தும். ஞானத்தால் உணரப்படுவது நேயம் எனப்படும் என அறிக. ஞானத்தால் பரம்பொருளை யுணரும் ஞானிகள் எய்தும் நிலையினை யுடையவன் என்பது பற்றி, “ஞான நிலையன்” என்று கூறுகின்றார்.

     இதனால், வேதாகமங்களின் உண்மைப் பொருள் சிவனே எனவும், அவன் ஞான நிலையினை யுடையவன் எனவும் விளக்கியவாறாம்.

     (26)