3980. வித்தெலாம் அளித்த விமலனை எல்லா
விளைவையும் விளைக்கவல் லவனை
அத்தெலாங் காட்டும் அரும்பெறல் மணியை
ஆனந்தக் கூத்தனை அரசைச்
சத்தெலாம் ஆன சயம்புவை ஞான
சபைத்தனித் தலைவனைத் தவனைச்
சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
உரை: எல்லாவற்றுக்கும் வித்தாய் நின்று அருள் புரிகின்ற விமலனும், எல்லாக் காரியப் பொருட்கும் உரிய இயல்புகளை விளக்க வல்லவனும், பொருள் வகை எல்லாவற்றையும் முற்றக் காட்டுகின்ற பெறுதற்கரிய மணி போல்பவனும், ஆன்மாக் கட்கு இன்பம் தருகின்ற கூத்தினை ஆடுபவனும், அருளரசனும், சத்தாகிய பொருட்கெலாம் முதற் பொருளான சிவனும், ஞான சபைக்குரிய ஒப்பற்ற தலைவனும், தவ வடிவானவனும், சித்துக்கள் எல்லாவற்றையும் தர வல்ல சித்தனும், ஒன்றாகிய பெருந் தெய்வமுமாகிய சிவ பரம்பொருளைக் கண்டு மகிழ்ந்தேன். எ.று.
வித்து - முதற் காரணம். எண்ணிறந்த பலவாகிய பொருள்களுக்கெல்லாம் முதற் காரணமாய் நின்று காரியப் பாட்டின்கண் விரிந்து நிலவுமாறு அருள் புரிதல் பற்றி, “வித்தெலாம் அளித்த விமலன்” என விளம்புகின்றார். விமலன் - மலமில்லாதவன். காரியமாகிய உலக நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் அமைந்த காரிய விளைவைக் கருவி, காலம், இடம் முதலிய கூறுகளைக் காட்டி விளக்க வல்லவன் என்பது பற்றி, “எல்லா விளைவையும் விளக்க வல்லவன்” என்று கூறுகின்றார். ஒரு பொருளின் விளைவுக்குரிய நிலம் காலம் முதலிய எட்டுக் கூறுகள் உண்டெனக் காட்டுவதாய், “வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி என்னா இன்னதற்கு இது பயனாக எட்டென்ப தொழில் முதல் நிலையே” என்று தொல்காப்பியம் கூறுவது காண்க. அத்து - பொருள். அத்தம் - ஈறு குறைந்து அத்து என வந்தது. உயரிய பொருள் வகைகளை ஈடு எடுப்புக்களால் வரையறுத்துக் காட்டும் வைரமணி போல்பவன் என்றற்கு, “அத்தெலாம் காட்டும் மணி” எனவும், அதன் அருமை புலப்பட, “அரும் பெறல் மணி” எனவும் சிறப்பிக்கின்றார். ஆன்மாக்கட்கு இன்பம் உளதாதற் பொருட்டு ஆடல் புரிகின்றானாதலால் சிவனை, “ஆனந்தக் கூத்தன்” என்று புகழ்கின்றார். “ஆனந்த மயமாய் நின்று ஆடும் பிரான்” என்று பெரியோர் கூறுதலால் இவ்வாறு கூறுகின்றார் எனினும் அமையும். சயம்பு - சிவன். சத்தாய பொருட்களுக் கெல்லாம் உரிய சத்தாந் தன்மை முழுதும் தானேயாகிய தனிப் பரமூர்த்தியாதலால், “சத்தெலாம் ஆன சயம்பு” என்று சாற்றுகின்றார். சயம்பு - சுயம்பு எனவும் வழங்கும். தவன் - தவத்தையுடையவன். செய்யப்படும் தவங்கட்கெல்லாம் தனிப் பயனாக விளங்குதல் பற்றி, “தவன்” என்று சிறப்பிக்கின்றார். சித்தன் - சித்து வகைகள் எல்லாவற்றையும் புரியும் தெய்வம். தன்னின் வேறாகப் பெரிய தெய்வம் ஒன்றும் இல்லாதவன் என்பது பற்றி, “ஒன்றாம் தெய்வம்” என இசைக்கின்றார். “யாதோர் தேவர் எனப்படுவார்க்கெலாம் மாதேவன்னலால் தேவர் மற்றில்லையே” (ஆதிபுரா) என்று திருநாவுக்கரசர் தெளிவாக உரைப்பது காண்க.
இதனால், சிவ பரம்பொருள் சத்தெலாம் ஆன சயம்புவாய் ஞானசபைத் தலைவனாய் விளங்கும் திறம் உரைத்தவாறாம். (27)
|