3981.

     உத்தர ஞான சித்திமா புரத்தின்
          ஓங்கிய ஒருபெரும் பதியை
     உத்தர ஞான சிதம்பர ஒளியை
          உண்மையை ஒருதனி உணர்வை
     உத்தர ஞான நடம்புரி கின்ற
          ஒருவனை உலகெலாம் வழுத்தும்
     உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
          ஓதியைக் கண்டுகொண் டேனே.

உரை:

     உத்தர ஞான சித்திபுரம் எனப்படும் வடலூரின்கண் எழுந்தருளும் ஒப்பற்ற பெரிய தலைவனும், அவ்வூரின்கண் அமைந்துள்ள உத்தர ஞான சிதம்பரத்தின்கண் விளங்குகின்ற பரவொளியாகியவனும், உண்மைப் பொருளாயவனும், ஒப்பின்றித் தனித்தோங்கும் உணர்வாகியவனும், மேலான ஞான நடம் புரிகின்ற ஒருவனும், உலகமெல்லாம் புகழ்கின்ற உயரிய ஞான நெறியாகிய சுத்த சன்மார்க்கத்தை ஓதியருளுபவனுமாகிய சிவபெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன். எ.று.

     தில்லையம்பதியாகிய சிதம்பரத்திற்கு வட மேற்கில் உளதாதல் பற்றி வடலூர்க்கு, “உத்தர ஞான சித்திபுரம்” என்றும், அவ்வூர்க்கண் அமைந்துள்ள ஞான சபைக்கு, “உத்தர ஞான சிதம்பரம்” என்றும் சிறப்பாகப் பெயர் கூறுவதுமுண்டு. அது பற்றி அவ்வூர்க்கண் எழுந்தருளுவதால், “சித்திமா புரத்தின் ஓங்கிய ஒரு பெரும் பதி” எனவும், வடலூரைத் தனக்குரிய பதியாகக் கொண்டு அங்கே எழுந்தருளும் நலம் விளங்க, “பெரும் பதி” எனவும் குறிக்கின்றார். பதியை யுடையவனைப் “பதி” என்பதும் நூல் வழக்கு. அவ்வூர்க்கண் தமக்குச் சிவஞானம் சித்தியுற்றமை காரணமாக வடலூர் வள்ளல் அவ்வூரை, “உத்தர ஞான சித்திபுரம்” எனப் பெயரிட்டுச் சிறப்பிக்கின்றார். சித்திபுரம் என்பது “உலோக மாபாலன்” (சீவக) என்றாற் போலச் சித்தி மாபுரம் என வந்தது. வடலூரில் உள்ள ஞான சபையும் “உத்தர ஞான சிதம்பரம்” என்று வள்ளற் பெருமானால் குறிக்கப்படுகின்றது. அதன்கண் ஒளிப் பொருளாய் விளங்கும் சிவனை, “உத்தர ஞான சிதம்பர ஒளி” என்று உரைக்கின்றார். அச்சிதம்பர ஒளியைத் தரிசிப்பார்க்கு உளதாகும் சிவஞான உணர்ச்சியை, “ஒரு தனி உணர்வு” என ஓதுகின்றார். ஞான நடம் புரியும் தேவர் பிறர் இல்லாமை விளக்குதற்கு, “உத்தர ஞான நடம் புரிகின்ற ஒருவன்” என்று மொழிகின்றார். வடலூர் வள்ளல் மேற்கொண்டு உரைக்கின்ற சுத்த சன்மார்க்கத்தை நல்லறிஞர் பலரும் நல்லதெனக் கொண்டு பாராட்டினமையின், “உலகெலாம் வழுத்தும் உத்தர ஞான சுத்த சன்மார்க்கம்” எனப் புகழ்ந்தும், அதனைத் தமக்குள் இருந்து இறைவன் உணர்த்தினான் என்பது புலப்பட, “ஓதி” என்றும் உரைக்கின்றார். ஓதி - ஓதுபவன்.

     இதனால், வடலூர்க்கண் ஒளி யுருவாய் ஞான நடம் புரிகின்ற கூத்தப் பெருமான் தமக்குச் சுத்த சன்மார்க்க ஞானம் வழங்கிய திறத்தை வடலூர் வள்ளல் எடுத்தோதியவாறாம்.

     (28)