47. உளம் புகுந்த திறம் வியத்தல்
அஃதாவது, சிவபெருமான் திருவடிகளின் சிறப்புக்களை எடுத்தோதி அப்பெருமான் தமது மனமாகிய குடிசைக்குள் எழுந்தருளிய நலத்தை வியந்து புகழ்வதாகும்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3984. வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
உள்ளமெனும் சிறுகுடிசை உள்ளும்நுழைந் தனையே.
உரை: மேலுலகில் இருக்கும் பிரமன், நாரணன் முதலிய தேவர்களும், மற்றவர்களும் பல்லாண்டுகள் பெரிய தவம் செய்து இறைவன் எழுந்தருளும் மணிகள் இழைத்த நெடிய வானத்தின் நடுவில் அமைந்த பளிங்குப் பாறை மேல் பரப்பிய தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த அணை மேல் இருந்தருளும் திருவடிக்கண் எம்மைச் சேர்த்தருள்க எனத் துதித்து வருந்தவும், நான் இருக்கும் குடிசை வீட்டிற்குத் தானே வலிய வந்து உள்ளே நுழைந்து எளியனாகிய எனக்கு நல்ல திருவருள் ஞானமாகிய அமுதத்தைத் தந்தருளியதோடு என் தசையோடு கூடிய உடம்பாகிய குடிசைக்குள் மனமுவந்து நுழைந்து அடியேனுடைய இல்ல மென்னும் சிறு குடிசைக்குள்ளும் போந்தருளினாய்; நினது இவ்வருட் செயலை என்னென்று புகழ்வேன். எ.று.
வானுலகத்திலும் அதற்கப்பால் மேலுள்ள சத்திய பதம், வைகுந்த பதம் முதலிய இடங்களில் வாழும் பிரமர்களும், நாரணர்களும் பிற உயர் பதமாகிய உருத்திர பதம் முதலியவற்றைப் பெற்றிருக்கும் தேவர்களும் நெடுங்காலம் பெரிய பெரிய தவங்களைச் செய்து சிவலோகத்தில் வீற்றிருக்கும் பெருமானாகிய சிவனுடைய சிவமாநகரை யடைந்து அங்குள்ள மணிமாடம் பொருந்திய மாளிகையின் நடுவிடத்தே அமைந்த பளிங்கு மேடை மேல் சிவபிரான் எழுந்தருளும் சிறப்பை, “வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம் பன்னாட் புரிந்து மணிமாட நடுவே தேன் இருக்கும் மலரணை மேல் பளிக்கறையினூடே திருவடி” என்று புனைந்துரைக்கின்றார். மணிமாட நடுவே பளிக்கறையினூடே தேனிருக்கும் மலரணை மேல் இருந்தருளும் திருவடி என வேண்டும் சொற்களைப் பெய்து இயைத்துக் கொள்க. பிரமன் நாரணன் முதலிய பதம் பெற்ற தேவர்கள் மிகப் பலராதலால் அவர்களை, “வானிருக்கும் பிரமர்களும் நாரணர்களும்” எனக் குறிக்கின்றார். திருநாவுக்கரசரும், “நூறு கோடி பிரமர்கள் நுங்கினார் ஆறு கோடி நாராயணர் அங்கனே ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்” என வுரைப்பது காண்க. அவர்களும் நெடுங்காலம் பெருந்தவம் புரிந்தே சிவ பரம்பொருளைக் காண்டல் கூடுமெனச் சிவனது அருமையைத் தெரிவித்தற்கு, “மாதவம் பன்னாட் புரிந்து” என்று கூறுகின்றார். சிவலோகத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளும் சிவமாநகர்க்கண் அவனது திருக்கோயில் இருப்பது தோன்ற, “மணிமாட நடுவே” எனவும், அதன் நடுவே பளிங்கு மேடையமைத்து அதன் மேல் புது மலர்கள் பரப்பிய அணையில் அவன் இருந்தருளும் காட்சியைப் புனைந்துரைத்து மகிழ்கின்றார். தேன் நிறைந்த புது மலர்கள் பரப்பிய இருக்கை என்பது விளங்க, “தேனிருக்கும் மலரணை” என்று சிறப்பிக்கின்றார். அந்தச் செல்வ இருக்கையை அடைந்து அங்குள்ள ஞான நிலையமாகிய திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுமாறு விண்ணப்பிக்கும் திறம் புலப்பட, “திருவடி சேர்த்தருளுக எனச் செப்பி வருந்திடவும்” என்று தெரிவிக்கின்றார். இங்ஙனம் - இவ்வாறு. பிரமன் முதலியோர்கள் பன்னாள் தவஞ் செய்து சிவலோகத்தை அடைந்து சிவமாநகர்க்கண் உள்ள மணிமாடத்தை அடைந்து அதன் நடுவே பளிங்கு மேடை மேல் திருவடி பொருந்த வீற்றிருக்கும் காட்சியை எடுத்தோதி, அவ்விடத்தே தேவர்கள் தம்மையும் அப்பெருமானுடைய திருவடியைச் சேர்த்து மகிழ்விக்குமாறு வேண்டுவதைக் கூறுதல் காண்க. இவ்வண்ணம் தேவர்களுக்கும் பெறலரியவாகிய திருவடிகள் வருந்தத் தமக்குக் காட்சி தந்தருளிய நலத்தை எடுத்தோதுவாராய், “நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து” எனவும், வலிய நுழைந்த பெருமான் வெறிதுமில்லாது திருவருள் ஞானமாகிய உயர்ந்த அமுதத்தை வழங்கியது சொல்வாராய், “நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கு நல்ல திருவருள் அமுதம் நல்கியது” எனவும் உரைக்கின்றார். மண்ணுலகில் தாம் இருக்குமிடம் ஒரு சிறு குடிசையாயினும் அதனை இகழாமல் வலிய நுழைந்தமை பற்றி, “நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து” எனத் தெரிவிக்கின்றார். வலிந்து - செய வென்னும் வினை யெச்சத் திரிபு. வலிய நுழைந்த பெருமான் வெறுங் கையொடு வாராது திருவருளாகிய நன்ஞானத்தை நல்கிய நலத்தை, “நல்ல திருவருளமுதம் நல்கியது” என்றும், அதனொடு அமையாது தமது உடலுக்குள் நுழைந்து அதனுள் இருக்கும் மனத்தின்கண் இடங் கொண்டமை தோன்ற, “அன்றியும் என் ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளமெனும் சிறு குடிசை யுள்ளும் நுழைந்தனையே” என்றும் எடுத்துரைத்து வியக்கின்றார். திருவருளாகிய அமுதம் என்பது திருவருட் சிவஞானம். ஊன் பொருந்திய தமது உடம்பைக் குடிசை என உருவகம் செய்கின்றாராதலால் அதனை, “ஊனிருக்கும் குடிசை” எனவும், அதன்கண் தூயராகிய சிவ பரம்பொருள் விரும்பி நுழைந்தருளினமை பற்றி, “உவந்து நுழைந்து” எனவும், அதன் உள்ளிருக்கும் மனத்தை உள்ளமெனும் சிறு குடிசை என்று கூறி அதனுள் இறைவன் வீற்றிருந்தமையைப் புலப்படுத்தற்கு, “உள்ளமெனும் சிறு குடிசை யுள்ளும் நுழைந்தனையே” எனவும் எடுத்தோதுகின்றார். சிவமணம் கமழும் செம்பொருளாகிய தான் ஊன் கலந்து புலால் நாறும் தம் உடம்பிற்குள் உள்ளாக இருக்கும் உள்ளத்தின்கண் வீற்றிருந்தருளுவதை, “உவந்து நுழைந்து” என்றும், “உள்ளும் நுழைந்தனையே” என்றும் உரைக்கின்றார்.
இதனால், சிவபெருமான் தமது உடலுள், உள்ளத்தின்கண் நுழைந்து வீற்றிருந்தருளும் அருள் நலத்தைப் புகழ்ந்தவாறாம். (1)
|