3986. உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
வண்ணம்எலாம் உவந்தளித்து வயங்கியபேர் இன்பம்
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
உரை: உள்ளவாறு உள்ளதாய் உலகங்கள் அத்தனையும் வந்து புகுந்தாலும் இடமில்லை எனச் சிறு தடையும் செய்யாததாய், ஒளி மயமாய், பரவெளியின்கண் நடுவகத்தே இருப்பதாய், தன்னியல்பில் விளக்கமுறும் வேதாந்தத்தின் இலக்காகிய பெரிய மேடையின்கண் இருந்தருளும் தாமரை மலர் போன்ற திருவடி சிவக்குமாறு என்பால் வந்து என்னுடைய கருத்தின்கண் யான் எண்ணிய எண்ணமெல்லாம் எண்ணியவாறு உவகையுடன் எய்துவித்து விளங்குகின்ற சிவானந்தத்தை யான் மிகுதியாகக் கொள்ளுமாறு எனக்குக் கொடுத்தருளியது போதுமன்றோ; அங்ஙனம் இருக்கவும் அருளரசாகிய நீ கொடிய புலைத்தன்மை பொருந்திய என்னுடைய உள்ளமாகிய குடிசைக்குள்ளும் நுழைந்து மகிழ்கின்றாய். எ.று.
இறைவன் திருவுள்ளத்தின்படியே அவனது இருப்பும் இயல்பும் வேற்றுமை சிறிதும் எய்தாது உள்ளது உள்ளபடியே இருத்தல் பற்றி, “உள்ளபடி உள்ளதுவாய்” எனவும், உலகுயிர்கள் அத்தனையும் முத்தி நிலையுற்று அவன்பால் அடையினும் அவனது பரமாந் தன்மை அவையனைத்தையும் ஒரு சிறு தடையுமின்றித் தனக்குள் அடக்கிக் கொள்ளுமாறு தோன்ற, “உலகமெலாம் புகினும் ஒரு சிறு தடையிலதாய்” எனவும், பரம்பொருள் பரஞான ஒளி மயமாய் விளங்குவது பற்றி, “ஒளியதுவே மயமாய்” எனவும் உரைக்கின்றார். பரம்பொருளின் பரவெளி உலக முதற் காரணமாகிய மாயா மண்டலத்திற்கப்பால் மாசு மறுவற்ற தூய பரவெளியாதலின் அதனை, “வெள்ள வெளி” என்றும், அதன்கண் நடுவகத்தே எத்துணைக் காலம் கழியினும் தன்னியல்பு மாறாது விளங்குவது பற்றி இயற்கையிலே விளங்கும் இயல்பினதாம் என்றற்கு, “வெள்ள வெளி நடு வுளதாய் இயற்கையிலே விளங்கும் இயல்பினதாம்” என்றும் இயம்புகின்றார். வேதாந்த ஞானத்தின் முடிபாகிய பிரம நிலையை, “வேத முடி இலக்கிய மாமேடை” என்றும், அதன்கண் சிவ பரம்பொருள் எழுந்தருளுவது விளங்க, “மேடையிலே அமர்ந்த வள்ள மலரடி” என்றும் கூறுகின்றார். வள்ள மலர் - கிண்ணம் போல் இதழ் விரிந்து விளங்கும் தாமரை மலர். உண்மை யன்பர்தம் உள்ளத்தில் அவர்கள் உன்னிய எல்லாவற்றையும் உன்னியவாறு உவப்புடன் அளித்து இன்பம் செய்வது சிவத்தின் சிறப்பியல்பாதலால், “எனது கருத்தின் வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கிய பேரின்பம் கொள்ளை கொளக் கொடுத்தது” எனக் கூறுகின்றார். யான் பெற்றது யாரும் பெறாத பேரின்பமாகவும், அதனொடு அமையாது மேலும் யான் இன்பம் எய்தும் பொருட்டு எனது உள்ளத்திலும் புகுந்து கொண்டாய் எனப் புகழ்வாராய், “என் குடிசையிலும் குலவி நுழைந்தனையே” என்று வியந்து மகிழ்கின்றார். கருதியது கருதியவாறு கைவரப் பெற்ற போது உளதாகிய இன்பத்தை, “பேரின்பம் கொள்ளை கொளக் கொடுத்தது” என்று கூறுகின்றார். அப்பொழுது உளதாகிய இன்பம் பேரின்பமாயினும் கொடுத்த பொருள் அளவே அப்பேரின்பத்தின் எல்லை நிற்றலால் அது மேலும் பெருகுமாறு என் குடிசையில் தானும் உள்ளத்திற் புகுந்து இன்பம் பெருக்குகின்றான் சிவபெருமான் என்பது புலப்பட, “கொள்ளை கொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே” என்பதனால் குறிக்கப்படுகின்றது. அப்பேரின்பப் பேற்றிற்கு இடமாகிய தமது உடம்பின் சிறுமையை விளக்குதற்கு, “கொடும் புலையேன் குடிசை” என்று குறைபட்டுக் கொள்கின்றார்.
இதனால், வேத வேதாந்த ஞானத்தின் முடி நிலையாகிய மேடையில் இருந்தருளும் இறைவன் திருவடி மேன் மேலும் இன்பம் பெருகுதல் வேண்டி என் உள்ளத்தில் புகுந்து நிற்கிறது எனப் புகன்றவாறாம். (3)
|