3988.

     இறைஅளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
          இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முதல் இடமாய்
     மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
          மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
     நிறையருட்சீர் அடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
          நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
     குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
          கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

உரை:

     சிறிதளவும் குற்ற மில்லாததாய், தூய்மை மிக்கதாய், குறைவில்லாத நிறைவாய், இயற்கையதாய், அனுபவங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையான இடமாய், வேதாந்தத்திற்கும் ஆகமாந்தத்திற்கும் முடிமேல் முடியாய் நிலைபெறுகின்ற மெய்ஞ் ஞானமாகிய மேடை மேல் வீற்றிருக்கின்ற அருள் நிறைந்த நின்னுடைய சிறப்புடைய மலர் போன்ற திருவடிகள் சிவக்குமாறு என்பால் எழுந்தருளி அடியேன் எண்ணிய எல்லாவற்றையும் கொடுத்தருளி அவை யென்பால் என்றும் நிலைபெறச் செய்துள்ளாய்; குறை சிறிதுமில்லாத இந்தப் பெரிய வரம் ஒன்றே எனக்குப் போதுமன்றோ; அதனோடு அமையாது அருள் அரசனாகிய நீ கொடிய புலைத் தன்மையையுடைய என் உடலுள் மனமாகிய குடிசையிலும் மகிழ்வோடு நுழைந்து இடம் பெற்றுள்ளாய்; நினது அருள் நலத்தை என்னென்பேன். எ.று.

     பரஞானமாகிய மெய்ம்மை ஞானம் குற்றமே கண்டறியாததாதலால், “இறை யளவும் துரிசிலதாய்” என்றும், தன்னளவில் மிக்க தூய்மையுடையதும் குறைவிலா நிறைவாகவும், தன்னியல்பில் எவ்வாற்றாலும் மாறாத இயற்கையதாய் இருப்பது புலப்பட, “தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதாய்” என்றும், உயிர்கள் பெறும் அனுபவங்கள் எல்லாவற்றிற்கும் தனித் தன்மை வாய்ந்த முதற் பொருளாய் அமைவது கொண்டு, “அனுபவங்கள் எவைக்கும் முதலிடமாம்” என்றும், வேத ஞானத்திற்கும் ஆகம ஞானத்திற்கும் அந்தத்துக் கந்தமாய் மேன் மேல் ஓங்கி நிலைபெறுவதாய்ச் சிறப்பது பற்றி, “மறைமுடியோடு ஆகமத்தின் மணிமுடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞானம்” என்றும் விளம்புகின்றார். மெய்ம்மை ஞானத்திற்கும் மேன்மை வாய்ந்தது சிவ பரம் பொருள் என்பது தெரிவிப்பாராய், மெய்ம்மை ஞானத்தை மணி மேடையாக்கி அதன் மேல் சிவத்தின் திருவடி ஞானம் திகழ்கிறது என்று தெரிவிப்பாராய், “மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த நிறையருட் சீரடி மலர்கள்” எனப் புகழ்கின்றார். திருவடி ஞானத்தைத் திருவடி என்றதனால் தன்பால் அஃது எய்தினமை விளங்க, “அடி மலர்கள் சிவந்திட வந்து” என்று செப்புகின்றார். திருவடிகள் திருவருளின் உருவகமாதலின், “நிறையருட் சீரடி மலர்கள்” என வுரைக்கின்றார். தாம் பெற நினைத்த திருவருள் ஞானம் முற்றும் தமக்குக் கொடுத்தருளின செய்தியைச் சிறப்பித்தற்கு, “நினைத்தவெலாம் கொடுத்தருளி நிலைபெறச் செய்தனை” எனவும், அது தாம் பெறுதற்கரிய பெரும் பேறு என்பாராய், “குறைவிலது இப்பெருவரந்தான் போதாதோ” எனவும், வரமருளிய பெருமானாகிய நீயே என் மனத்தினும் குடி புகுந்து வீற்றிருக்கின்றாய் என்று தாமுற்ற இன்பத்தை வியந்து, “கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனை” எனவும் கூறுகின்றார்.

     இதனால், பாச ஞானமாகிய மெய்ஞ்ஞானத்தின் மேலதாய் விளங்குகின்ற திருவருட் டிருவடி ஞானத்தின் செம்மை நிலை உரைத்தவாறாம்.

     (5)