3989. உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
சிறியேன்கண் அடைந்தருளித் திருஅனைத்தும் கொடுத்தாய்
குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
உரை: உருவம், அருவம், அருவுருவம் என்ற உருவ வகைகளையுடையதாய், உணர்வாய், உள்பொருளாய், ஒரு தன்மைத்தாய், விளங்கும் பெரிய தலைவனாய், நூல்கள் உரைக்கும் வேதாந்தம் முதல் அவற்றால் வகுக்கப்படும் கலாந்தம் வரையில் உள்ள அந்தங்களின் மேல் உள்ள அருள்வெளியில் விளக்கமுறுகின்ற மேடை மேல் மங்கலமாக அமர்ந்தருளும் உன்னுடைய திருவடிகளை வைத்துச் சிறுமையுடையவனாகிய என்பால் வந்தருளி ஞானச் செல்வமனைத்தையும் எனக்குக் கொடுத்தருளினாய்; எனக்குக் குருவும் அருளரசுமாகிய பெருமானே; எனக்கு இது போதுமன்றோ; அதற்கு மேலும் அடியேனுடைய உடலும் உள்ளமும் ஆகிய குடிசையிலும் கூசுதலின்றிப் புகுந்து வீற்றிருக்கின்றாய். எ.று.
உருவம், அருவம், அருவுருவம் என மூவகை உருவம் உடையது சிவம் எனவும், ஞான மயமானது எனவும், என்றுமுள்ள மெய்ப்பொருள் எனவும், அஃது எக்காலத்தும் ஒரு தன்மைத்தானது எனவும் சான்றோர் உரைப்பது பற்றிப் பரசிவத்தை, “உருவினதாய் அருவினதாய் உருவருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒருதன்மையுடைய பெரும் பதி” என உரைக்கின்றார். எல்லா நூல்களும் வேதவேதாந்தங்களைத் தழுவியே நிற்பதால் அவற்றை, “மருவிய வேதாந்தம்” என்றும், வைதிக ஞானத்தால் வேதாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், சித்தாந்தம், கலாந்தம் என ஆறாக அறிஞர் வகுத்தாராயும் இயல்பு தோன்ற, “வகுத்திடும் கலாந்தம்” என மொழிகின்றார். வேதாந்தம் முதலாகக் கூறிய அறுவகை அந்தங்கட்கு அப்பால் விளங்கும் அருள் வெளி பரசிவ வெளியாதலால் அதனை விளக்குதற்கு, “அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடை” என்றும், ஆங்குச் சிவ பரம்பொருள் எழுந்தருளும் திறம் தெரிவிக்க, “திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள்” என்றும் சிறப்பிக்கின்றார். பரசிவ வெளி “அருள் வெளியில் வயங்கிய மேடை” எனக் குறிக்கின்றார். எங்கும் எப்பொருட்கும் மங்கலம் உண்டாகச் சிவம் எழுந்தருளுவது பற்றி, “திருவுற அமர்ந்தருளும் திருவடி” என்று புகழ்கின்றார். சிவஞானத்திற் கேதுவாகிய ஞான நலங்கள் அத்தனையும் “திருவனைத்தும்” எனத் தொகுத்துரைக்கின்றார். ஞானம் அருளுவது பற்றிச் சிவ பரம்பொருளை, “குருவே” என்று கூறுகின்றார்.
இதனால், மூவகை யுருவும், உணர்வுருவும், உள்பொருளாம் தன்மையுமுடைய பரசிவம் அருள் வெளியில் எழுந்தருளும் இயல்பு கூறியவாறாம். (6)
|