3990.

     மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
          வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
     வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஒரு வெளியில்
          மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
     எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
          இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
     குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
          கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.

உரை:

     நறுமணமும் பேரொளியும் உடையதாகவும், மந்திரங்கட்கெல்லாம் ஆதாரமாய், எல்லாம் வல்லதாய், நலமே புரிவதாய், எல்லா மதங்களின் வரம்புகளையும் கடந்த எல்லையை யுடையதாய், அழகும் வளமும் உடையதாய், விளங்குவது பரசிவ வெளியில் சிவஞானமாகிய மணி மேடையில் இந்தத் திருவடிகளை எடுத்துரைத்துச் சிவத்தையே எண்ணிக் கொண்டிருக்கும் என்பால் வந்தருளி யான் எண்ணிய எல்லாவற்றையும் எய்த அருளினாய்; எனக்கு இவ்வரு ளொன்றே போதுமன்றோ; எனினும் எனக்கு அருளரசும், ஞான வுருக் கொண்ட குணக்குன்றும், அருள் ஞான அமுதமும், குருவுமாகிய என் தலைவனாகிய நீ என்னுடைய உடலும் உள்ளமுமாகிய குடிசைக்குள்ளும் போந்தருளி வீற்றிருக்கின்றாய். எ.று.

     மணம் - சிவமணம். ஒளி - அருளொளி. மந்திர ஆதாரம் - மந்திரங்கட்கெல்லாம் ஆதாரம்; மந்திரங்களை விரும்பி ஏற்கும் மந்திரப் பொருள் எனினும் பொருந்தும். உலகில் மதங்களும் சமயங்களும் வரையறுக்கும் எல்லைகள் எல்லாவற்றிற்கும் அப்பாலாய் அவை எல்லாவற்றையும் ஏற்று நிற்பது பற்றிப் பரம்பொருளை, “மதங் கடந்த வரைப்பு” என்று மாண்புறுத்துகின்றார். வணம் - அழகு. வண்ணம் வணம் என வந்தது. சிறப்புடைய ஞானத்தையே தனக்குச் செல்வமும் பொருளுமாகக் கொண்டமை தோன்ற, “வளமுளதாய்” என வரைந்து கூறுகின்றார். இப்பரவெளியில் பரசிவம் எழுந்தருளும் பரநிலை “மணி மேடை” எனப் படுகிறது. அதன்கண் இருந்து மண்ணுலகில் என்பால் எழுந்தருளி யான் எண்ணிய நலங்கள் எல்லாவற்றையும் எனக் களித்துள்ளாய்; இனி எவற்றாலும் யான் குறைவிலேன் என்பாராய், “இங்கு இதுதான் போதாதோ” என்று இயம்புகின்றார். ஞானத்தாலும் நற்குணங்களாலும் மலை போல் திண்மையும் சலியாத் தன்மையும் கொண்டிருப்பது விளங்க, “ஞானக் குண மலையே” என்று போற்றுகின்றார்.

     இதனால், ஞான மணம் ஞான ஒளி முதலாகிய நலம் பலவும் கொண்ட பரசிவ வெளியின் பண்பு கூறி அங்குள்ள சிவ பரம்பொருள் தனக்கு அருள் வழங்கிய திறத்தை விரிய உரைத்தவாறாம்.

     (7)