3992.

     பற்றியபற் றனைத்தினையும் பற்றற விட் டறிவாம்
          பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
     உற்றறிதற் கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
          ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
     பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
          பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே
     கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
          குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.

உரை:

     உலக வாழ்வில் என்னை வந்து பற்றிய பற்றுக்கள் அத்தனையும் எஞ்சாமல் துறந்து அறிவாகிய தன்மை ஒன்றே வடிவமாய் முதிர்ந்த பெரியவர்களும் கண்டறிதற் கரிதாகிய ஒப்பற்ற பெரிய பரவெளிக்கு அப்பாலுள்ள ஞான வெளியில் உயர்ந்த சிவமாகிய மணி மேடையில் எழுந்தருளி ஓங்குகின்ற திருவடி ஞானத்தை அடியேன் பெற்று அறிதற் பொருட்டு என்பால் வந்து யான் கருதும் கருத்துக்கள் அத்தனையும் கைவரத் தந்து யானும் இனிப் பிறப்பிறப்பின்றி உயர்வடையும்படி செய்தருளினாய்; இவ்வாற்றால் வெற்றி யுடையனாய் இருக்கும் எனது அருளரசாகிய நீ உதவிய இது போதுமன்றோ; அங்ஙனமிருக்க, கொடுமை யுடையவனாகிய என்னுடைய குடிசையிலும் சுணக்கமின்றி எழுந்தருளி என்னை மகிழ்விக்கின்றாய். எ.று.

     முன்னை வினைகளாலும் பின்னர்த் தோன்றிய வினைகளாலும் பற்றிய உலகியல் பற்றுக்கள் அனைத்தையும் பற்றறத் துறந்து மெய்யறிவாகிய உண்மை ஞானமே வடிவமாகி உயர்ந்தோங்கிய சான்றோர்களை, “பற்றிய பற்றனைத்தினையும் பற்றற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவாகிப் பழுத்த பெரியவர்” என வள்ளற் பெருமான் விளங்க உரைக்கின்றார். ஞானத்தால் முதிர்ந்த பெருமக்கள் என்று பொருள்பட அவர்களைப் பழுத்த பெரியவர் என்பது குறிக்கத் தக்கது. அவர்களை ஞானசம்பந்தர், “அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர்” (மிழலை) என விளம்புவர். ஞானமே வடிவாகிய தூய ஞானிகளுக்கும் அறிய வொண்ணாதது பரசிவப் பரவெளி எனக் காட்டுதற்கு, “பழுத்த பெரியவரும் உற்று அறிதற் கரிய ஒரு பெருவெளி மேல் வெளி” என உரைக்கின்றார். தத்துவ மண்டலத்திற்கு அப்பாலுள்ள வெளிகட் கெல்லாம் மேலதாகிய உபசாந்தப் பேரொளியை, “மேல் வெளி” என்று இயம்புகின்றார். அப்பரசிவ வெளியில் இருந்தொளிரும் சிவபோக நிலை “மணி மேடை” எனக் குறிக்கப் படுகிறது. அவ்விடத்தினின்றும் சிவபெருமான் மண்ணகம் போந்து தம்பால் வந்ததாகக் கற்பனை செய்கின்றாராதலின், “மணி மேடையமர்ந்து ஓங்கிய சேவடிகள் பெயர்த்து வந்து” என்றும் தாம் கருதிய பொருள்கள் யாவையும் தமக்கு எய்துவித்தமை தோன்ற, என் கருத்தனைத்தும் கொடுத்து அதுவே ஏதுவாகப் பிறவா இறவாப் பெரு நிலையில் தம்மை வாழ வைத்தார் என்பாராய், “பிறவாமல் இறவாமல் பிறங்க வைத்தாய்” என்றும் பேசுகின்றார். இவ்வாற்றால் பிறப்பு இறப்புக்களை வென்ற வெற்றி யுடையேன் என்று மகிழ்ந்தவராய் எனக்கு இது போதும் எனப் போற்றுகின்றாராதலால், “அரசே குற்ற முடையேன் தனக்கு இது போதாதோ” எனக் கூறுகின்றார். பிறப் பிறப்பை வென்ற இன்பப் பெருநிலையில் இருப்பது புலப்பட, “கொற்றம் உளேன்” எனக் குறிக்கின்றார்.

     இதனால், பழுத்த ஞானிகளாலும் அறிதற் கரியது பரசிவ வெளி என்பது விளக்கியவாறாம்.

     (9)