48. வரம்பில் வியப்பு
அஃதாவது, இறைவனுடைய அருளிப் பாட்டின், பெருமையைக் கண்டு எல்லையில்லாது பெருகும் வியப்பு மேலீட்டால் அதனைப் புகழ்ந்தோதுவது.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3994. பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
புகலரும் பெரியஓர் நிலையில்
இன்புரு வாகி அருளொடும் விளங்கி
இயற்றலே ஆதிஐந் தொழிலும்
தன்பொதுச் சமூகத் தைவர்கள் இயற்றத்
தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
அவன்தனை மறுப்பவர் யாரே.
உரை: திருமகளைத் தோளிலே கொண்ட திருமாலும் பிரமனும் மற்றவரும் அடைதற் கரிய பெரிய ஒப்பற்ற நிலையில் இன்ப வடிவாய் அருளொடு கூடி, விளக்க முற்றுப் படைத்தல் முதலிய தொழில்கள் ஐந்தையும், பொதுவான தனது திருமுன் பிரமன் முதலிய தேவர்கள் ஐவரும் செய்யத் தனியரசு புரிகின்ற ஒப்பற்ற தலைவனாகிய சிவபெருமான் அன்பு நிறைந்த மனமென்னும் என் குடிசைக்குள் புகுந்து கொண்டான் எனில், அவனை யாவர் விலக்க வல்லார். எ.று.
பொன் புனை புயன், திருமகள் வீற்றிருக்கின்ற தோள்களை யுடைய திருமால். வெற்றித் திருமகள் வீற்றிருப்பது பற்றித் திருமாலை இவ்வாறு கூறுகின்றார். திருமகள் பொன்னிற முடையவளாதலின், அவளைப் பொன் என்று குறிக்கின்றார். புயன் - புயங்களை யுடையவன். புயம் - தோள். உருத்திரன் முதலிய தேவர்களை மற்றவர் எனக் கூறுகின்றார். திருமால் முதலிய தேவர் பதங்கள் அனைத்திற்கும் மேலாய் அப்பாலாய் விளங்கும் சிவ பதத்தை, “பெரிய ஓர் நிலை” என்று உரைக்கின்றார். புகல் - புகுதல். தன்னியல்பில் வடிவினனாதல் பற்றிச் சிவனை, “இன்புருவாகி” என்றும், அவ்வின்பத்தைத் தனக்கே உரியதாக்கிக் கொள்ளாமல் எல்லா ஆன்மாக்களுக்கும் அளித்து மகிழ்விக்கும் அருட் சத்தியோடு கூடியிருத்தல் பற்றி, “அருளொடு விளங்கி” என்றும் இயம்புகின்றார். இயற்றல் ஆதி ஐந்தொழில், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்துமாம். சிவத்தின் திருமுன் அருட்சத்தி துணை புரிய பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகிய ஐவர்களும் முறையே படைத்தல் முதலிய தொழில் வகை ஐந்தையும் செய்யா நிற்கத் தான் அரசு வீற்றிருத்தல் பற்றிச் சிவனை, “இயற்றலே ஆதி ஐந்தொழிலும் தன் பொதுச் சமூகத்து ஐவர்கள் இயற்றத் தனியர சியற்றும் ஓர் தலைவன்” என மொழிகின்றார். தேவ தேவர்கட் கெல்லாம் மாபெரும் தலைவனாகிய சிவபெருமான், எல்லா உலகங்கட்கும் மேலாய் அப்பாலாய் உள்ள சிவ பதத்தில் ஒப்பற்ற தலைவனாய் வீற்றிருப்பவன்; அதனை விடுத்து அன்பு நிறைந்த என் மனமாகிய சிறு குடிசைக்குள் புகுந்து கொண்டான் எனில், இது வியக்கும் எல்லைக்கும் அப்பாற்பட்ட வியப்புத் தருவ தொன்றாம் என்றும், இவ்வாறு எல்லாருக்கும் மேலாய்ப் பெருமகனாய்ப் பிறங்குகின்ற சிவபெருமான் பெருமையையும் மனமென்னும் குடிசையின் சிறுமையையும் நோக்கிச் சிறு குடிசைக்குள் எழுந்தருளுதல் கூடாதென விலக்க வல்லார் ஒருவருமிலர் என்றும் உரைப்பாராய், “அன்பெனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்தனை மறுப்பவர் யாரே” என எடுத்துரைக்கின்றார்.
இதனால், இறைவன் பெருமையும் அவன் எழுந்தருளுகின்ற மனத்தின் சிறுமையையும் எண்ணி வியந்தவாறாம். இதுவே இனி வரும் பாட்டுக்களிலும் கருத்தாக உரைத்துக் கொள்க. (1)
|