3995.

     மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
          மன்னுருத் திரர்களே முதலா
     ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
          குறுபெருந் தொழில்பல இயற்றி
     இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
          இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
     அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
          அவன்தனை மறுப்பவர் யாரே.

உரை:

     உலகில் மக்களாயினார் வகுத்தும் விரித்தும் உரைக்கும் பிரமர்கள் நாரணர்கள் பெரிய உருத்திரர்கள் முதலிய, ஒன்பது கோடியென எண்ணப்பட்ட தலைமைத் தேவர்கள் ஆங்காங்குத் தங்களுக்குரிய பதங்களில் இருந்து கொண்டு தமக்குற்ற படைத்தல் முதலிய தொழில்கள் பலவற்றையும் செய்து இன்புறுமாறு சிறிதளவு கடைக்கண் புரிந்து அருள் செய்து விளங்கும் ஒப்பற்ற இறைவனாகிய சிவபெருமான் இப்பொழுது அடியேனுடைய அன்பு நிறைந்த மனமாகிய குடிசைக்குள் எழுந்தருளி யுள்ளான்; ஐயோ, அவனது பெருமை நோக்கி இக்குடிசைக்குள் புகுதல் கூடாதென மறுக்க வல்லவர் யாவர். எ.று.

     மன்பதை, மக்களினம், மக்களுள் உலகப் படைப்புப் பற்றி எடுத்துரைக்கும் புராணிகர்களை இங்கே “மன்பதை” என்று குறிக்கின்றார். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் பிரமன் முதலியோர் மிகப் பலராதலால் அவர்களை, “பிரமர் நாரணர்கள் மன்னுருத்திரர்கள்” என மொழிகின்றார். படைக்கும் பிரமர்கள், காக்கும் நாரணர்கள் ஆகியோரினும் உருத்திரர்கள் பெரியவர்கள் ஆதலால், “மன்னுருத்திரர்கள்” என்று சிறப்பிக்கின்றார். இவர்களின் தொகை இத்துணை எனத் தெரிவித்தற்கு, “ஒன்பது கோடித் தலைவர்கள்” என உரைக்கின்றார். இத்தேவ தேவர்கள் அனைவரும் தத்தமக்குரிய பிரம பதம், வைகுண்ட பதம், உருத்திர பதம் முதலாக வுள்ள பதங்களிலே இருந்து கொண்டு மேற்கூறிய தொழில் வகை ஐந்தையும் முறையே செய்தொழுகுவதும், அச்செயல் முடிவின்கண் எய்தும் இன்பத்தில் திளைப்பதும் விளங்க, “ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்கு உறுபெருந் தொழில் பல இயற்றி இன்புற” என உரைக்கின்றார். தொழில் பல செய்வதும், தொழில் முடிவில் இன்புறுவதும் உலகியல் முறையாதலால், “பெருந் தொழில் பல இயற்றி இன்புற” எனக் கூறுகின்றார். பிரமன் முதலிய தேவ தேவர்கள் தாம் செய்யும் பெரிய தொழில்களைக் குறைவறச் செய்து முடிப்பதற்கு இறைவனது திருவருள் நோக்கம் இன்றியமையாதாதலால், “சிறிதே கடைக்கணித் தருளி இலங்கும் ஓர் இறைவன்” என்று புகழ்கின்றார். கடைக் கணித்தல், கடைக் கண்ணால் பார்த்தருளல். சிறிது பார்த்த அளவிலே பெருந் தொழில் செய்பவர் அனைவரும் அவற்றை முட்டின்றி ஒரு சிறு குறையுமின்றிச் செய்து முடிக்கும் பேராற்றலைப் பெறுவதால் அதுவே அமையும் என்றற்கு, “சிறிதே கடைக்கணித் தருளி” என்று தெரிவிக்கின்றார். யாவர்க்கும் மேலாம் அளவிலாப் பெரியவனாகிய சிவபெருமான், மனமென்னும் சிறு குடிசைக்குள் எழுந்தருளுவது எண்ணிறந்த வியப்பாக இருத்தலால், “இறைவன் இன்று அடியேன் அன்பெனும் குடிசை நுழைந்தனன்” எனவும், அவனது பெருமைக்குச் சிறு குடிசைக்குள் புகுந்தருளுவது பொருந்தா தென எண்ணி விலக்குபவர் ஒருவருமிலர் என்றற்கு, “அந்தோ அவன்தனை மறுப்பவர் யாரே” எனவும் இயம்புகின்றார்.

     (2)