3996.

     தன்னிகர் இல்லாத் தலைவஎன் றரற்றித்
          தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
     உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
          ஒருதனிப் பெரும்பதி உவந்தே
     புன்னிகர் இல்லாப் புலையனேன் பிழைகள்
          பொறுத்தருட் பூரண வடிவாய்
     என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
          எந்தையைத் தடுப்பவர் யாரே.

உரை:

     தனக்கு ஒப்பவர் ஒருவருமில்லாத தலைவனே என்று ஓலமிட்டுத் தனித்தனியாக வேதங்களும் ஆகமங்களும் நின்று நினைந்தும், தேடியும், பன்முறை நுணுகி நுணுகி உணர முயன்றும் உணர வொண்ணாத ஒரு தனிப் பரம்பொருளாகிய சிவப் பெரும்பதி மனமுவந்து சிறு புல்லுக்கும் ஒப்பாகாத புலையனாகிய என்னுடைய குற்றங்களைப் பொறுத்தருளி, நிறைந்த அருளுருவாய் என் மனத்திற்குள் புகுந்து நிறைந்து வீற்றிருப்பானாயினான்; ஐயோ எனக்கு எந்தையாகிய அவனைத் தடுக்க வல்லவர் யாவர். எ.று.

     தனக்கு உவமை யில்லாத தலைவனாதலால் சிவபெருமானாகிய தலைவனை வேதங்களும் ஆகமங்களும் ஒப்பில்லாத பெருமானே என்று பன்முறையும் தனித்தும் பலராகக் கூடியும் துதிப்பது விளங்க, “தன்னிகரில்லாத் தலைவ என்று அரற்றி” எனவும், இவ்வாறு துதிப்பதோடு அவன் நலங்கள் பலவற்றையும் எடுத்தோதும் வேத நூல்களையும் அப்பெருமானை வழிபடுதற்குரிய நெறி முறைகளையும் உரைக்கின்ற ஆகமங்களையும் நன்கு நினைந்து ஓரிடத்தே இருந்து சிந்தித்து ஓதிப் பன்முறையும் நுணுகி நுணுகி ஆராய்ந்தும் அவனது உண்மைத் தன்மையை உணர வொண்ணாது ஒழிவது பற்றி, “மறைகள் ஆகமங்கள் உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந் துணரா ஒரு தனிப் பெரும் பதி” எனவும் இயம்புகின்றார். மறைகள் ஆகமங்கள் என்பது வைதிக ஞானமும் ஆகம ஞானமும் உடையவர்களாகிய ஞானவான்களை என அறிக. உணர்ந்துணர்ந்து என்னும் அடுக்கு பன்முறை ஆராய்ந்தமை குறிக்கின்றது. தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப் பெருந் தலைவனாதலால் அப்பெருமானை, “ஒரு தனிப் பெரும் பதி” என்று போற்றுகின்றார். பதிப் பொருளாகிய பரம்பொருளை எவரும் தாமே முயன்று அடைவது அரிதாகலின் அப்பெருமான் தானே மனமுவந்து ஆன்மாக்களை நோக்கி வந்தருளினாலன்றி அவனை அடைதல் முடியாது என்பது பற்றி, “உவந்து” என்றும், புலைத் தன்மையை யுடைய தமது சிறுமை புலப்பட, “புன்னிக ரில்லாப் புலையனேன்” என்றும் புகல்கின்றார். புலைத் தன்மை, பல்வேறு குற்றங்களைப் புரியும் சிறுமை. அப்பெருமான் தானே மனமுவந்து வந்தருளுதற்குச் செய்யப்படும் பிழைகள் ஒழிய வேண்டுதலின் அவற்றை மன்னித்தருளிய மாண்பு விளங்க, “பிழைகள் பொறுத்து” எனவும், நிறைந்த பேரருளே தனக்கு வடிவமாய் எழுந்தருளினமை விளங்க, “அருட் பூரண வடிவாய் என்னுளம்புகுந்து நிறைந்தனன்” எனவும் ஓதுகின்றார். பிழை செய்யும் பண்பு பொருந்திய மனத்தினுள் அஃது ஒரு சிறிதும் இல்லாத பரம்பொருள் எழுந்தருளுகின்றதே என இரங்குவாராய், “அந்தோ எந்தையைத் தடுப்பவர் யாரோ” என இயம்புகின்றார்.

     (3)