3997. பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
பாலதோ பால்உறா அதுவோ
ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
இயற்கையோ ஆதியின் இயல்போ
மேல்வகை யாதோ எனமறை முடிகள்
விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
வள்ளலைத் தடுப்பவர் யாரே.
உரை: பால்வகை இரண்டனுள் ஆணோ பெண்ணோ எனவும், ஆணும் பெண்ணும் ஆகியதோ எனவும், பால் பகுக்க வொண்ணாத, பால் பகாப் பொருளாகிய அதுவோ எனவும், யாவரும் ஏற்கும் வகையில் ஒன்றோ இரண்டோ எனவும், அனாதியோ ஆதியோ எனவும், மேன்மைத் தன்மை பொருந்திய அதன் வகை யாதோ எனவும், வேத முடிபுகளைக் கூறும் வேதாந்த சாத்திரங்கள் எடுத்துரைக்க விளங்குகின்ற பரம்பொருளாகிய சிவ பெருமானாகிய தலைவன் மயங்கும் இயல்பினதாகிய மனத்தை யுடைய எனது உள்ளமாகிய குடிசைக்குள் புகுந்தருளினாள்; அருள் வள்ளலாகிய அப்பெருமானைப் புகாதபடி விலக்க வல்லவர் யாவர். எ.று.
தமிழ் இலக்கணங்கள் பொருளியல்பு உரைக்குமிடத்து அதனை ஐம்பால்களால் பிரித்துக் காண்பது பற்றி, “பால் வகை ஆணோ பெண்கொலோ” என்றும், ஆண் என்றும் பெண் என்றும் வரையறுத்துக் கூற வொண்ணாத உருவங்களும் உளதாகலின், “இருமைப் பாலதோ” என்றும், பால் பகுக்கலாகாத அஃறிணை யினத்துப் பொருளோ என்பாராய், “பால் உறா அதுவோ” என்றும் இயம்புகின்றார். எண்ணுவகையில் ஒன்றோ இரண்டோ எனத் தெளியலாகாமை பற்றி, “ஏல் வகை ஒன்றோ இரண்டதோ” என எடுத்தோதுகின்றார். “பெண்ணல்லை ஆண்ணல்லை பேடுமல்லை பறிதல்லை பிரானாயும் பெரியோய் நீயே” (ஒற்றி) என்று தமிழ்முறை கூறுதலால், “பால் வகை ஆணோ பெண் கொலோ இருமைப் பாலதோ பாலுறா அதுவோ” என்று பகர்கின்றார். ஆண்மை பெண்மை என்ற இரு தன்மையுமுடைய பேடு அலி என்பவற்றை, “இருமைப் பாலதோ” எனவும், பால் பகா அஃறிணை ஒருமைப் பொருளைக் குறித்தற்கு, “பால் உறா அது” எனவும் கூறுகின்றார். ஒன்றோ இரண்டோ பலவோ என ஒண்ணாமை பற்றி, “ஏல் வகை ஒன்றோ இரண்டதோ” என இசைக்கின்றார். ஏல் வகை - ஏற்கும் வகை. தோற்றக் கேடுகள் இல்லாமையால், “அனாதி இயற்கையோ” எனவும், தோற்றக் கேடுகள் உண்மையின், “ஆதியின் இயல்போ” எனவும் ஆராயும் மரபு பற்றி எடுத்துரைக்கின்றார். இந்தத் தன்மைத் தென வேதங்களாலும் வேதாந்த நூல்களாலும் வரையறுத்து உணர்த்த முடியாமை புலப்பட, “மேல் வகையாதோ என மறைமுடிகள் விளம்பிட” எனவும், இவ்வாறு வைதிக நூல் ஆராய்ச்சிக்கும் தெளியப் படாமை பற்றி இல்பொருள் ஆகாமல் உள்பொருளாய் விளக்க முறுகின்றானாதலால் சிவனை, “விளங்கும் ஓர் தலைவன்” எனவும் விளம்புகின்றார். காணப்படும் பொருள்கள் அத்தனையும் தெளியக்காணாது ஐயம் திரிபுகட்கு இரையாகி மயங்கும் இயல்பினதாதலால், “மால் வகை மனம்” என இயம்புகின்றார். குடில், குடிசை. மனத்தின் உட்கூறு உளமாதலால், “மனத்தேன் உளக்குடில்” என்று குறிக்கின்றார். (4)
|